சான் பிரான்சிஸ்கோ – (நேற்று ஆப்பிள் நிறுவனம் வெளியிட்ட சாதனங்களில் ஆப்பிள் கைக்கெடிகாரங்களில் இடம் பெற்றிருக்கும் தொழில் நுட்ப மேம்பாடுகள் என்ன என்பதை விவரிக்கும் கட்டுரை)
நேற்று செப்டம்பர் 9 ஆம் தேதி, உலகெங்கும் உள்ள ஆப்பிள் சாதன பயனர்களும், தொழில் நுட்ப வல்லுநர்களும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த நாளாகும். காரணம், அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில், புதிய ஆப்பிள் சாதனங்களும், தொழில் நுட்ப மேம்பாடுகளும் நேற்று அறிமுகம் செய்யப்பட்டன.
ஆண்டு தோறும் செப்டம்பர் மாத வாக்கில் புதிய சாதனங்களையும், ஏற்கனவே பயன்பாட்டில் இருக்கும், சாதனங்களில் புதிய மேம்பாடுகளையும் அறிவிப்பதும், அறிமுகப்படுத்துவதும் ஆப்பிளின் வழக்கமாகும்.
அந்த வகையில் நேற்று ஆப்பிள் அறிமுகப்படுத்திய புரட்சிகரமான தொழில் நுட்பங்களை உள்ளடக்கிய – நாம் எப்படி சிந்திக்கப் போகின்றோம், செயல்படப் போகின்றோம் என்பதையெல்லாம் மாற்றியமைக்கப் போகின்ற சாதனங்கள், தொழில் நுட்பங்கள் வரிசையில் – முதல் சாதனமாக அறிமுகம் கண்டது ஆப்பிள் வாட்ச் எனப்படும் கைக்கெடிகாரங்களாகும்.
முற்றிலும் மாற்றியமைக்கப்பட்ட ஐபேட் புரோ என்ற கையடக்கக் கருவி ஆப்பிளின் மற்றொரு புதிய அறிமுகமாகும்.
புதிய ரக ஐபோன்களும், புதிய மேம்படுத்தப்பட்ட ஐஓஎஸ் 9 தொழில்நுட்பமும் கூட நேற்றைய அறிமுக விழாவில் இடம் பெற்றன.
மருத்துவ, சுகாதார நடைமுறைகளை மாற்றப் போகும் ஆப்பிள்வாட்ச்
ஆப்பிள் வாட்ச் பற்றிக் குறிப்பிட்ட ஆப்பிள் தலைமைச் செயல் அதிகாரி டிம் கும் இதுவரை 97% பயனீட்டாளர் திருப்தியை ஆப்பிள் கைக்கெடிகாரங்கள் பெற்றிருப்பதாக பெருமையுடன் அறிவித்தார்.
ஆப்பிள் கெக்கெடிகாரத்தின் துணை கொண்டு, உடலில் இதயத் துடிப்பு அளவுகளைக் கணக்கிட்டு உடற்பயிற்சிகள் மூலமும், உடல் நலத்தைப் பேணுவதன் மூலமும் ஒருசிலர் 30 கிலோ வரை எடை குறைத்திருக்கின்றார்கள் என்ற சுவாரசியத் தகவலையும் டிம் கும் வெளியிட்டார்.
இதுவரை ஆப்பிள் கைக்கெடிகாரங்களுக்கென பிரத்தியேகமாக 10,000 ஆப்பிள் வாட்ச் செயலிகள் பயன்பாட்டுக்கு வந்திருப்பதாகவும் தெரிவித்த டிம் குக், இனி பேஸ்புக் இணையப் பக்கங்களும் ஆப்பிள் கைக்கெடிகாரங்களில் இடம்பெறும் எனக் கூறினார்.
ஐடிரான்ஸ்லேட் எனப்படும் செயலி மூலம் – குரல் மூலம் மொழி மாற்றம் செய்யும் வசதிகளையும் புதிய ஆப்பிள் வாட்ச் கொண்டிருக்கும்.
உதாரணமாக, ஆப்பிள் கைக்கெடிகாரத்திற்கு குரல் மூலம் நீங்கள் சில அந்நிய மொழி வாக்கியங்களைக் கூறினால், அது ஐ-டிரான்ஸ்லேட் செயலி மூலம் உங்களுக்குத் தேவையான மொழியில் நீங்கள் கூறும் வாக்கியத்துக்கான அர்த்தத்தை மறுமொழியாக தெரிவிக்கும்.
வயிற்றில் இருக்கும் குழந்தையின் இதயத்துடிப்பை உணரலாம்
புதிதாக நேற்று அறிமுகப்படுத்தப்பட்ட ஆப்பிள் கைக்கெடிகாரத்தின் மற்றொரு குறிப்பிடத்தக்க அம்சம், கர்ப்பிணிப் பெண் ஒருவரின் இதயத் துடிப்பையும், அவரது வயிற்றில் இருக்கும் குழந்தையின் இதயத்துடிப்பையும் அந்தக் கைக்கெடிகாரத்தால், ஒரு சேரக் கண்காணிக்கவும் உணரவும் முடியும் என்பதுதான்.
இந்த இதயத் துடிப்பு அளவுகளை நீங்கள் பின்னர் மருத்துவருக்கு அனுப்ப முடியும். இதன் மூலம் கர்ப்பிணிப் பெண் மற்றும் அவரது வயிற்றில் உள்ள குழந்தையின் இதயத் துடிப்பு ஆகிய அளவுகளை வைத்து, உங்கள் உடல்நலத்தைப் பேணுவதற்கான தகவல்களை பரிமாறிக் கொள்வதிதிலும் ஆலோசனைகள் கூறுவதிலும் மருத்துவர்கள் ஈடுபட முடியும் என்ற புதிய, அதிநவீன தொழில் நுட்ப கால கட்டத்தில் நாம் இந்த ஆப்பிள் கைக்கெடிகாரங்கள் மூலம் கால் பதித்திருக்கின்றோம்.
ஆப்பிள் கைக்கெடிகாரங்களுக்கான புதிய கைப்பட்டைகள், புதிய வண்ணங்களில், வடிவமைப்புகளில் வெளியிட்டிருக்கின்றார்கள் என்பது மற்றொரு கூடுதல் தகவல்.
செப்டம்பர் 16 முதல் புதிய ரக ஆப்பிள் கைக்கெடிகாரங்களும் அதற்கான தொழில் நுட்ப மேம்பாடுகளும் முதல் கட்டமாக 24 நாடுகளில் பயன்பாட்டுக்கு வெளியிடப்படும்.
தொகுப்பு – இரா.முத்தரசன்