Home நாடு தடுப்புக் காவலில்11 நாட்களில் 3 பேர் மரணம்

தடுப்புக் காவலில்11 நாட்களில் 3 பேர் மரணம்

565
0
SHARE
Ad

karuna

சிரம்பான், ஜூன் 3 – குடும்பத் தகராறு காரணமாக விசாரணைக்காக தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் பொறியியலாளர் கருணாநிதி த/பெ பழனிவேல் (வயது 42) திடீரென்று மரணமடைந்துள்ள சம்பவம் அவரது குடும்பத்தினரை கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது.

தன் மனைவியோடு கொண்ட குடும்பத் தகராறு காரணமாக, கடந்த மே 28 ஆம் தேதி தம்பின் காவல்நிலையத்தில் விசாரணைக்காக கருணாநிதி தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.

#TamilSchoolmychoice

பின்னர் அவர் இவ்வழக்கு தொடர்பாக தம்பின் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு 4 ஆயிரம் ரிங்கிட் பிணையில் விடுவிக்க நீதிபதி உத்திரவிட்டார்.

ஆனால் பிணைத்தொகையை செலுத்த இயலாத அவரது குடும்பத்தினர், இன்று ஜூன் 3 ஆம் தேதி அத்தொகையை செலுத்தி அவரை விடுவித்துக் கொள்வதாக உறுதியளித்ததை அடுத்து கருணாநிதி மீண்டும் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 7 மணியளவில் கருணாநிதி இறந்துவிட்டதாக, அவரது குடும்பத்தினருக்கு காவல்துறையினர் கைப்பேசி வாயிலாக இரவு 9.40 மணிக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனால் கடும் அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் அவரது இறப்பு குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று கூறியுள்ளனர்.

சிரம்பானிலுள்ள துவாங்கு ஜபார் மருத்துவமனையில் நடந்த சவப்பரிசோதனையில் கருணாநிதியின் தலைப்பகுதியின் பின்புறத்தில் ரத்தம் வழிந்ததற்கான அடையாளங்கள் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டதால் கருணாநிதி சித்திரவதை செய்யப்பட்டிருக்கிறார் என்று அவரது சகோதரர் தமிழன்பன் கூறியுள்ளார்.

மனைவியைத் தாக்கியதாகப் புகார் செய்யப்பட்டதால் குற்றவியல் சட்டம் 324 பிரிவின் படி அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தடுப்புக் காவலில் 11 நாட்களில் 3 பேர் மரணம்

தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருக்கும் இந்தியர்கள் மர்மமான முறையில் இறப்பது தொடர்கதை ஆகிவிட்டது. கருணாநிதியின் திடீர் மரணம் கடந்த 11 நாட்களில் தடுப்புக்காவலில் நடக்கும் 3 ஆவது மரண சம்பவம் ஆகும்.

இதற்கு முன் கடந்த மே 26 ஆம் தேதி பினாங்கு காவல்நிலையம் ஒன்றில் ரமேஷ்(வயது 40) என்பவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவர் கல்லீரல் கோளாறினால் மரணமடைந்ததாகக் கூறப்பட்டது.

அதேபோல் கடந்த மே 21 ஆம் தேதி தர்மேந்திரன் (வயது 31) என்பவர் கோலாலம்பூர் காவல் நிலைய தலைமையகத்தில் இறந்தார். அவரது உடம்பில் சித்திரவதை செய்யப்பட்டதற்கான அடையாளங்கள் இருந்தது பிரேதப் பரிசோதனையில் கண்டறியப்பட்டது.

தர்மேந்திரன் இறப்பு தொடர்பாக காவல்துறையின் மீது எழுந்த பல்வேறு விமர்சனங்கள் அடங்குவதற்குள், தடுப்புக் காவலில் இன்னொரு மரணம் நிகழ்ந்துள்ளது, நாடெங்கிலும் உள்ள இந்திய மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.