Home நாடு “அதிர்ச்சி அடைகின்றேன்! ஆனாலும் கணவருக்காக பெருமைப்படுகின்றேன்” – உதயகுமார் மனைவி

“அதிர்ச்சி அடைகின்றேன்! ஆனாலும் கணவருக்காக பெருமைப்படுகின்றேன்” – உதயகுமார் மனைவி

830
0
SHARE
Ad

uthayakumarஜூன் 6 அடுத்த இரண்டரை வருடங்களுக்கு கணவரோடு குடும்பம் நடத்த முடியாது, உடன் வாழ முடியாது என்ற சோகம் ஒரு புறம் இருந்தாலும் தனது கணவரின் உறுதியான, சோரம் போகாத மனத் திண்மையை எண்ணித் தான் பெருமைப்படுவதாக அவரது மனைவி எஸ்.இந்திரா தேவி கூறியுள்ளார்.

#TamilSchoolmychoice

மலேசியாகினி இணைய செய்தித் தளத்துக்கு வழங்கிய குறுகிய நேர தொலைபேசி நேர்காணலின்போது இந்திரா இதனைத் தெரிவித்தார்.

ஒரு நியாயமான காரணத்துக்காக  நடத்திய போராட்டத்திற்காகத்தான் அவர் சிறை செல்கின்றார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அவர் என்ன செய்கின்றார் என்பது அவருக்குத் தெரியும். அவரது போராட்டம் இறுதிவரை தொடரும். இந்தியர்களைப் பாதிக்கும் பிரச்சனைகளுக்காக அவர் தன்னால் இயன்ற அளவுக்கு போராட்டம் நடத்தி வருகின்றார் என்று சோகத்துடனும், கண்ணீர் விசும்பல்களுக்கும் இடையிலும் இந்திரா கூறினார்.

நேற்று வழக்கு நடைபெறும் போது இந்திராதேவி நீதிமன்றத்திற்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்று நடைபெற்ற வழக்கின்போது தனக்கு எதிராக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களுக்கு எதிர்வாதம் செய்யாமல் மௌனத்தை மட்டுமே பதிலாக வழங்கிய காரணத்தால், 30 மாத சிறைத்தண்டனை உதயகுமாருக்கு வழங்கப்பட்டது.

தனது தண்டனையை எதிர்த்து அவர் மேல் முறையீடு செய்யவும் முன்வராத காரணத்தால், அவர் உடனடியாக காஜாங் சிறைச்சாலைக்கு கொண்டு போகப்பட்டார்.

அந்த தீர்ப்பைக் கேட்டதும் தான் அதிர்ச்சி அடைந்ததாகக் கூறிய இந்திரா இருப்பினும் உதயகுமார் உடனடியாக சிறைச்சாலைக்கு கொண்டு போகப்படுவார் என தான் எதிர்பார்க்கவில்லை என்றும் கூறினார்.

ஆதரவுக்கு நன்றி

கடந்த சில ஆண்டுகளாக தனது கணவர் இந்திய சமுதாயத்திற்காக நடத்தி வரும் போராட்டங்களுக்கு குறிப்பாக தடுப்புக் காவல் மரணங்கள், நாடற்ற மக்களின் பிரச்சனைகள் போன்றவற்றுக்கு துணை நின்று ஆதரவு கொடுத்த ஆதரவாளர்களுக்கு தான் நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் இந்திரா குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில், உதயகுமாருக்கு எதிராக வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்யும் முடிவு எதனையும் இப்போதைக்கு செய்யவில்லை என்றும் அவரது வழக்கறிஞர் மனோகரன் மலையாளம் கூறியுள்ளார்.