58-வயதில் மாரடைப்பால் அவரது உயிர் பிரிந்து விட்டது. மணிவண்ணனை நேசித்த…. ரசித்த நெஞ்சங்களுக்கு இந்த திடீர் மரணம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது என்றால் அது மிகையாகாது.
இயக்குனர் பாரதிராஜா விடம் உதவி இயக்குனராக தமிழ் சினிமாவில் கால்பதித்த மணிவண்ணன் பின்னர் அவரது வெற்றி படங்களான அலைகள் ஓய்வதில்லை, காதல் ஓவியம் படங்களுக்கு வசனங்களையும் தீட்டியிருந்தார். கோபுரங்கள் சாய்வ தில்லை மணிவண்ணனின் முதல் படம். நூறாவது நாள் படம் மணிவண்ணனை திகில் பட இயக்குனராக அடையாளம் காட்டியது.
பிரபு, சத்யராஜ் நடித்த சின்னதம்பி பெரியதம்பி குடும்ப பாங்கான நகைச் சுவை படம். அவரது சினிமா வாழ்க்கையில் மைல் கல்லாக அமைந்த படம் அமைதிப்படை. தேங்காய் பொறுக்கியாக அமாவாசை என்ற கதாப்பாத்திரத்தில் வரும் சத்யராஜ், மிகப்பெரிய அரசியல்வாதியாக மாறுவதே படத்தின் கதை. அமாவாசை, நாகராஜ சோழன் எம்.எல்.ஏ என சத்யராஜின் 2 கதாபாத்திரங்களையும் பட்டை தீட்டியிருப்பார் மணி வண்ணன். அப்படத்தில் இடம் பெற்ற அரசியல் நையாண்டி வசனங்கள் இப்போதும் ரசிக்கக் கூடியவை.
அமைதிப்படை படத்தில் சத்யராஜை பார்த்து மணிவண்ணன் பேசும் வசனம் இது. சிரிக்கத் தெரியாதவர்கள் எல்லாம் அரசியல்வாதியாக இருக்கும் போது, உனக்கென்னய்யா குறைச்சல், நீ நல்லா பேசுற… வாய்யா அரசியலுக்கு என்பார். இது அப்போது பிரபலமாக இருந்த ஒரு அரசியல் தலைவரை மையமாக வைத்து எடுக்கப்பட்ட காட்சியாகும்.
இதே போல் அப்படத்தில் கதாநாயகி கஸ்தூரிக்கு சத்யராஜ் அல்வா கொடுத்து கற்பை சூறையாடி ஏமாற்றும் காட்சியும் பிரபலம். இப்படி சிறந்த இயக்குனராக தன்னை வெளிக்காட்டியவர் மணிவண்ணன். சிறந்த நகைச்சுவை நடிகராகவும், குணச்சித்திர நடிகராகவும் பல படங்களில் நடித்துள்ளார். அவ்வை சண்முகி படத்தில் பெண் வேடத்தில் வரும் கமலஹாசன் பின்னால் சுற்றி சுற்றி வந்து டெல்லி கணேசுடன் அடிக்கும் லூட்டிகள் மறக்க முடியாதவை.
சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியான மாயாண்டி குடும்பத்தார் படத்தில் 4 மகன்களின் ஏழைத் தந்தையாக வாழ்ந்து காட்டியிருப்பார் மணிவண்ணன். இப்படி திரையுலகில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக கோலோச்சி வந்த மணிவண்ணன், திரைப்பட தயாரிப்பாளர் ஒருவரின் அலுவலகத்தில் அலுவலக எடுப்பிடியாக ‘ஆபீஸ் பாய்’ கத்தான் தனது வாழ்க்கை தொடங்கினார். கடின உழைப்பும், வீடா முயற்சியும் பின்னால் அவரை உயரத்துக்கு கொண்டு சென்றன. எதையும் வெளிப்படையாக பேசுதல்… தவறு என்றால் சுட்டிக் காட்டுதல்… ஆகியவை இயற்கையாகவே மணிவண்ணனிடம் அமைந்திருந்தது. அது தானாகவே அவரை அரசியலுக்கு இழுத்து வந்தது.
மணிவண்ணனின் இறுதிச் சடங்கு