ஜூன் 17- மத்திய அமைச்சரவையில் திங்கள்கிழமை மாற்றம் செய்யப்பட உள்ளது.
அமைச்சரவை மாற்றத்துக்கு முன்னோடியாக மத்திய வீட்டு வசதித் துறை மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சர் அஜய் மக்கான் சனிக்கிழமை தமது பதவியை ராஜிநாமா செய்தார். இவர் கட்சிப் பணிக்கு அனுப்பப்படுவார் என கூறப்பட்டது.
இந்நிலையில், அஜய் மக்கானைத் தொடர்ந்து, போக்குவரத்து மற்றும் ரயில்வே துறை அமைச்சர் சி.பி.ஜோஷி தனது பதவியை ஞாயிற்றுக்கிழமை ராஜிநாமா செய்தார். கட்சி எனக்கு என்ன பணியை தந்தாலும் எனது திறமைக்கு ஏற்ப அதனை நிறைவேற்றுவேன் என அவர் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
அடுத்த மக்களவைத் தேர்தல் நடப்பதற்கு ஒரு வருடத்துக்கும் குறைவான கால அவகாசமே இருக்கும் நிலையில் இதுவே மத்திய அமைச்சரவையில் கொண்டு வரப்படும் கடைசி மாற்றமாக இருக்கும் என்று கூறலாம். கடந்த ஆண்டு அக்டோபருக்குப் பிறகு மத்திய அமைச்சரவையில் நடக்கும் இரண்டாவது மாற்றமாகும்.
மத்திய அரசுக்கு தந்த ஆதரவை திரிணமூல் காங்கிரஸ் கட்சியும் திமுகவும் விலக்கிக் கொண்ட பின்னர், அந்தக் கட்சியைச் சேர்ந்தவர்கள் வகித்துவந்த அமைச்சர் பதவிகளுக்கு புதிய அமைச்சர்கள் நியமிக்கப்படவில்லை. ஏற்கெனவே அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த மூத்த அமைச்சர்களுக்கு அந்த துறைகள் கூடுதல் பொறுப்பாக அளிக்கப்பட்டன. பல்வேறு துறைகளில் முழு நேர அமைச்சர்கள் இல்லாத நிலையில் திங்கள்கிழமை புதிய அமைச்சர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
திமுகவைச் சேர்ந்த ஐந்து அமைச்சர்கள் தங்கள் பதவிகளை ராஜிநாமா செய்தார்கள். மத்திய ரசாயன மற்றும் உர துறை அமைச்சராக இருந்த மு.க.அழகிரியைத் தவிர ஏனையோர் இணை அமைச்சர்களாக இருந்தனர்.
அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு விவகாரத்தை தொடர்ந்து, தயாநிதி மாறன், ஆ.ராசா ஏற்கெனவே தங்களது அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்துவிட்டனர்.
ரயில்வே வாரிய உறுப்பினர் நியமன விவகாரத்தில் தனது நெருங்கிய உறவினர் லஞ்சம் பெற்று கைதானதை தொடர்ந்து பவன்குமார் பன்சால் ராஜிநாமா செய்தார். அதை தொடர்ந்து ரயில்வே துறை கூடுதல் பொறுப்பாக சி.பி.ஜோஷிக்கு தரப்பட்டது.
நிலக்கரி சுரங்க உரிம முறைகேடு தொடர்பான சிபிஐ விசாரணையில் மத்திய சட்ட அமைச்சர் தலையிட்டதாக எழுந்த சர்ச்சையைத் தொடர்ந்து அஸ்வினி குமார் தனது பதவியை விட்டு விலகினார். சட்டத் துறையை கபில் சிபல் கூடுதல் பொறுப்பாக கவனித்து வருகிறார்.
அமைச்சரவை மாற்றத்தின்போது, இரண்டு துறைகளை கவனித்துவரும் அமைச்சர்களிடமிருந்து ஒரு துறை பறிக்கப்படும் என்று தெரிகிறது.
பொதுத் தேர்தலை முன்னிட்டு, ஊரக வளர்ச்சித் துறை அமைச்சராக உள்ள ஜெய்ராம் ரமேஷ் கட்சிப் பணிக்கு அனுப்பப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் நிலம் கையகப்படுத்துதல் மசோதா நிலுவையில் உள்ளது. இந் நிலையில், ஜெய்ராம் ரமேஷ் கட்சிப் பணிக்கு அனுப்பப்பட மாட்டார் என்று கூறப்படுகிறது. நிலம் கையகப்படுத்துதல் மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிய பின்னர் அவர் அமைச்சர் பதவியை விட்டு விலகி கட்சிப் பொறுப்பேற்பார் எனத் தெரிகிறது.