புதுடெல்லி, ஜூன் 20 – இந்தியாவின் வடமாநிலமான உத்தரகாண்டில் மழை வெள்ளத்தால் யாத்திரிகர்களுக்கு பெரும் சோகம் ஏற்பட்டுள்ளது. வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் சேற்றில் கூட்டம் கூட்டமாக புதைந்து ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளதாகக் அஞ்சப்படுகிறது.
உத்தரகாண்ட், இமாச்சலப் பிரதேசம், அரியானா மாநிலங்களில் பருவமழையின் போது வழக்கமாக பெய்யும் மழையின் அளவை விட, கடந்த 3 நாட்களில் மூன்று மடங்கு அதிகமாக பெய்ததால் ஆறுகளில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஏராளமான பகுதிகள் மழை வெள்ளத்தில் சிக்கியுள்ளன. ஆங்காங்கு நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
வட மாநிலங்களில் கடந்த 3 நாட்களுக்கும் மேலாக துவம்சம் செய்து வந்த மழை, பல இடங்களில் நேற்று சற்று ஓய்ந்தது. வெப்பநிலையும் சாதகமாக இருந்ததால், மீட்புப் பணிகள் சுறுசுறுப்பாக மேற்கொள்ளப்பட்டன. உத்தரகாண்டில் மழை,வெள்ளத்துக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இவர்களில் பெரும்பாலோர் யாத்திரிகர்கள். வெள்ளம், நிலச்சரிவால் கூட்டம் கூட்டமாக சேற்றில் புதைந்து இவர்கள் இறந்துள்ளனர். புகழ்பெற்ற கேதார்நாத் கோயில் அருகே 50 பக்தர்கள் புதைந்து பலியாகினர். வெள்ளத்தில் இக்கோயில் முழுமையாக மூழ்கி விட்டது. இதனால்,கோயில் அப்படியே இருக்கிறதா? இடிந்து விட்டதா என தெரியவில்லை என மாவட்ட கலெக்டர் ஜஸ்பால் ஆர்யா கூறியுள்ளார்.
இக்கோயிலுக்கு செல்லும் பாதைகளில் ஆங்காங்கு 6 ஆயிரம் பக்தர்கள் சிக்கியுள்ளனர். உத்தரகாண்ட் முழுவதும் 60 ஆயிரம் பேர் வெள்ளத்தாலும், நிலச் சரிவாலும் ஆங்காங்கு சிக்கி தவித்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலோர் புனித யாத்திரை சென்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.