Home உலகம் அரசியல் பிரச்சினைகளை தீர்க்க பொது வாக்கெடுப்பு: பிரேசில் அதிபர்

அரசியல் பிரச்சினைகளை தீர்க்க பொது வாக்கெடுப்பு: பிரேசில் அதிபர்

662
0
SHARE
Ad

சா பாவ்லோ, ஜூன் 25- பிரேசில் நாட்டு அரசு, இந்த மாதம் முதல் வாரத்தில் சுரங்கப்பாதை மற்றும் பேருந்துக் கட்டணங்களை உயர்த்தியது. இது மக்களிடையே பெரிய எதிர்ப்பைத் தூண்டியது. மக்களின் தொடர் போராட்டங்களினால் இந்தக் கட்டண உயர்வை அரசு திரும்பப்பெற்றது.

DilmaRousseffஆயினும், அரசின் செயல்முறைகளிலும், எங்கும் பரவியுள்ள லஞ்ச ஊழல்களிலும் அதிருப்தியுற்ற மக்கள் தங்களின் போராட்டங்களைத் தொடர்ந்தனர். மக்களின் போராட்டங்களை நிறுத்துவதற்காகவும், நாட்டில் நிலவி வரும் லஞ்ச ஊழல் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காகவும் அதிபர் தில்மா ரூசோ பொது வாக்கெடுப்பு முறையை அறிவித்துள்ளார்.

இதன்மூலம் நாட்டின் அரசியல் முறையைத் தூய்மைப்படுத்த முடியும் என்று அவர் எண்ணுகின்றார். இந்நிலையில் நேற்று அதிபர் ரூசோ (படம்), மாகாணத் தலைவர்கள், மாநிலங்களின் மேயர்கள் அனைவருடனும் இதுகுறித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.

#TamilSchoolmychoice

மக்கள் பேருந்து கட்டண உயர்விற்காகப் போராட்டத்தை ஆரம்பித்ததால், பொது மக்கள் பங்கு பெறும் தேசிய போக்குவரத்து ஆணையம் ஒன்றினை நிறுவுவதாக அவர் அறிவித்தார். 25 பில்லியன் அமெரிக்க டாலர்கள் முதலீட்டில் நகர்ப்புற போக்குவரத்து வசதிகள் மேம்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.

இதேபோன்று நகராட்சி செயல்பாடுகளிலும் மக்களின் பங்களிப்பு தேவை என்று குறிப்பிட்ட அதிபர் மாநில மேயர்கள் அதுகுறித்த ஏற்பாடுகளைச் செய்யவேண்டும் என்று குறிப்பிட்டார். இந்த சந்திப்பிற்கு முன்னதாக அதிபர் இலவச பேருந்து அனுமதி பெற்றிருந்த மக்களைச் சந்தித்தார். மத்தியதர வர்க்கத்தைச் சேர்ந்த பெரும்பான்மையான இளைஞர்களே போராட்டங்களில் ஈடுபட்டிருந்தனர்.

அவர்கள் நாட்டில் நிலவி வரும் லஞ்ச ஊழலையும், பொதுமக்களுக்கான அரசின் சேவைக் குறைபாடுகளையும் அதிபரிடம் குறிப்பிட்டுள்ளனர். எனவே, இந்தப் பிரச்சினைகளுக்கு நிரந்தரமாகத் தீர்வு காணும் விதமாக குடியுரிமை கொண்ட பொதுமக்களின் பங்களிப்பு அரசியலில் இருந்தால்தான் மறுமலர்ச்சி பெறமுடியும் என்று அதிபர் தில்மா ரூசோ தெளிவு படுத்தினார்.

பொதுமக்களுக்கும் தன்னுடைய நிலை குறித்த செய்தி ஓன்றினை அதிபர் வெளியிட்டுள்ளார். பிரேசில் முன்னேற விரும்புவதாகவும், அதற்குண்டான அனைத்து வழிமுறைகளும் செய்யப்படும் என்றும் அவர் தனது குறிப்பில் மக்களுக்கு உணர்த்தியுள்ளார்.

கல்வி, மருத்துவம் போன்ற துறைகளிலும் மக்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேற்றப்படும் என்று தில்மா ரூசோ அளித்துள்ள உறுதிமொழிகள், நாட்டின் அரசியல் நிலையில் மாற்றங்களைக் கொண்டு வரலாம் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.