ஜோஹனஸ்பர்க், ஜூன் 25- தென்னாப்பிரிக்காவின் இனவெறிக்கு எதிராகப் போராடியவரும், முதல் கறுப்பின அதிபருமான நெல்சன் மண்டேலா (வயது 94). நுரையீரல் தொற்று காரணமாக கடந்த 8-ம் தேதி பிரிட்டோரியா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
மூன்று நூற்றாண்டுகளாக வெள்ளையர் ஆதிக்கத்திலேயே இருந்து வந்த தென்னாப்பிரிக்காவில், தனது பெருமுயற்சியின் விளைவாக 1994ஆம் ஆண்டு குடியாட்சி மலரச் செய்து, கறுப்பின மக்களும் அதில் பங்கு கொள்ளும்படி நிறவெறிக் கொள்கையை மாற்றியமைத்தவர் மண்டேலா ஆவார்.
நேற்று திங்களன்று, அதிபர் ஜாகோப் சுமா மருத்துவமனையில் இருக்கும் மண்டேலாவை சந்தித்து வந்தார். பின்னர் பத்திரிகையாளர்களை சந்தித்த அவர், மண்டேலாவின் உடல்நிலை மோசமாக உள்ளதை உறுதி செய்தார். அவருக்கு நல்லமுறையில் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருவதாகவும், கவனமுடன் பார்த்துக் கொள்ளப்படுவதாகவும் கூறிய அதிபர்
மடிபாவிற்கு வயதான காரணத்தால் அவரது உடல்நிலை சிரமத்தைத் தரும் என்பதனை மக்கள் உணரவேண்டும் என்று கூறினார்.
மண்டேலாவின் மகள் மகசிவி, தாங்கள் இருக்கும் நாட்களை அவருடன் மகிழ்ச்சியுடன் கழிப்பதாகவும், அவர் ஒரு நல்ல குடும்பத் தலைவராக தங்களுக்கு இருந்துள்ளார் என்பதையும் நினைவு கூர்ந்தார்.
பொதுமக்களிடையே, மருத்துவர்கள் அவரது உயிரை நீட்டிக்க முயற்சிப்பதாகவும் ஒரு கருத்து எழுந்துள்ளது. ஆயினும், மண்டேலாவின் உடல்நிலை மோசமடைந்துள்ளதும், கடந்த இரண்டு வாரங்களாக தீவிரமான நிலையில் மருத்துவமனையில் இருப்பதுவும், மக்களிடையே பிரார்த்தனைகளுக்குப் பதிலாக தங்களின் அன்புக்குரிய தலைவனுக்கு பிரியாவிடை கொடுக்கும் நேரம் வரப்போகின்றது என்ற துன்பம் கலந்த எதிர்நோக்கும் மனப்பான்மையை அளித்துள்ளது.