கோலாலம்பூர், ஜூன் 27 – மலேசிய தேர்தல் முறைகளுக்கு அழியா மை தேவையில்லை காரணம் நாம் ‘மூன்றாம் உலக நாடுகள்’ இல்லை என்று கூட்டரசுப் பிரதேச அமைச்சர் தெங்கு அட்னான் தெங்கு மான்சோர் தெரிவித்துள்ளார்.
இன்று நாடாளுமன்றத்துக்கு வெளியே செய்தியாளர்களை சந்தித்த அவர், “எதிர்கட்சிகளின் கோரிக்கையின் படி தான் நாடாளுமன்றத்தில் அழியா மை ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆனால் அதில் அதிக அளவிலான ரசாயனங்களைச் சேர்ப்பது உடல் நலத்திற்கு நல்ல தல்ல” என்று தெரிவித்தார்.
“இந்தியா போன்ற நாடுகளில் வாக்காளர்களுக்கு இடப்படும் மை ஒன்று அல்லது இரண்டு மாதங்கள் வரை அழியாது. இது உடல் நலத்தை பாதிக்கும். அதனால் தான், மக்களின் மீது அக்கறை கொண்டு, மலேசிய அரசாங்கம் அழியா மையில் உள்ள ரசாயனங்களைக் குறைத்தது” என்று அவர் கூறினார்.
மேலும் அடையாள அட்டைகளைப் பயன்படுத்தி வாக்களிக்கும் முறை சிறந்தது என்றும், அதற்கு அழியா மை தேவையில்லை என்றும் தெங்கு அட்னான் குறிப்பிட்டார்.