கோலாலம்பூர், ஜூன் 27- கூட்டரசுப் பிரதேச அமைச்சரும் புத்ராஜெயா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ தெங்கு அட்னான் தெங்கு மன்சோரின் சிறப்பு அதிகாரியாக டத்தோ ஆர்.ரமணன் நியமிக்கப்பட்டார்.
இது குறித்து கருத்துரைத்த டத்தோ ரமணன், தமக்கு இப்படியொரு வாய்ப்புக் கிடைத்திருப்பதை எண்ணி மிகவும் மகிழ்ச்சி கொள்ளும் அதே சமயம், இதன் வாயிலாக இந்திய சமுதாயத்திற்கு தற்போதுள்ளதைக் காட்டிலும் இன்னும் கூடுதலான உதவிகளை வழங்கிடுவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள முடியும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
இந்தியர்களுக்கான எனது சேவை தொடரும்
இந்திய சமுதாயத்தினரைப் பொருத்தவரையில், கூட்டரசுப் பிரதேசத்தில் எவ்வளவு வாய்ப்புகள் இருப்பினும் அது பெரும்பாலானோருக்கு அவ்வளவாகத் தெரிவதில்லை. அதேசமயம், தெரிந்தவர்களுக்கு அவற்றைப் பெறுவதற்கான வழிவகைகள் பிடிபடுவதில்லை.
ஆகவே, தாம் கூட்டரசுப் பிரதேச அமைச்சர் டத்தோஸ்ரீ தெங்கு அட்னான் தெங்கு மன்சோரின் சிறப்பு அதிகாரியாக நியமனம் பெற்றிருப்பதன் வாயிலாக, இந்தியர்களின் பிரச்சனைகளைக் களைவதற்கு ஒரு வாய்ப்பாக அமைந்திருப்பதோடு, கூட்டரசுப் பிரதேசத்தில் ஏற்படுத்தப்படும் வாய்ப்புகளை இந்தியர்களுக்கும் விரிவுபடுத்துவதற்குரிய தருணமாக அமையும் என டத்தோ ரமணன் குறிப்பிட்டார்.
இந்தியர்கள் சார்ந்த பிரச்சனைகள், எதிர்பார்ப்புகள் ஆகியனவற்றை நேரடியாகவே டத்தோஸ்ரீ தெங்கு அட்னானின் பார்வைக்கு கொண்டு செல்வதன் வாயிலாக, நிலுவையில் இருக்கும் ஏனைய பிரச்சனைகளுக்கும் விரைந்து தீர்வு காண முடியும்.
அது மட்டுமின்றி தமக்கு வழங்கப்பட்டுள்ள இந்தப் பொறுப்பானது, இந்திய சமுதாயத்திற்கும் ம.இ.கா கட்சிக்கும், ம.இ.கா தேசிய இளைஞர் பிரிவுக்கும் ஒரு பலமாகவும் ஊன்றுகோலாகவும் விளங்கும் என்பதில் துளியளவும் ஐயமில்லை என உறுதியாக கூறினார்.
கூட்டரசுப் பிரதேச அமைச்சு என்பது சாதாரணமான ஒன்றல்ல. புத்ராஜெயா, லாபுவான் ஆகிய இடங்கள் கூட்டரசு பிரதேச அமைச்சின் கீழ் உள்ளடங்கும். ஆகவே, இங்குள்ள இந்தியர்களுக்கெல்லாம் நிச்சயம் ஒரு வழி பிறக்க, இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி கொண்டு சிறந்த சேவையை வழங்குவதற்கு எண்ணம் கொண்டுள்ளதாக தெரிவித்தார்.
இந்திய இளைஞர்களின் சிறந்த எதிர்கால நலனுக்குச் சிறந்த வியூகங்கள் வரையறுப்பது குறித்தும் நான் எனது கருத்துகளையும் ஆலோசனைகளையும் டத்தோஸ்ரீ தெங்கு அட்னான் பார்வைக்குக் கொண்டு செல்வேன் என நம்பிக்கை தெரிவித்தார்.