சென்னை, ஜூலை 6- தர்மபுரியில் காதல் திருமணம் செய்த இளவரசன் மரணம் தொடர்பாக, தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-
தர்மபுரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற சாதிக் கலவரம் குறித்து விரிவான அறிக்கையை தமிழக அரசு தாக்கல் செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அவ்வாறே அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது.
இவ்வளவிற்கும் பிறகு அங்கே அமைதி ஏற்படவில்லை. திருமணம் செய்து கொண்ட காதலர்கள் இருவரும் பிரிந்து விட்டார்கள். இந்த சம்பவத்தின் உச்சகட்டமாக திருமணம் செய்து கொண்ட அந்த தலித் சமுதாயத்தைச் சேர்ந்த இளவரசன் மாண்டு விட்டார்.
அவரது மரணம் குறித்து உயர்மட்ட அளவில் விசாரணை நடத்தப்பட வேண்டும். கொலை என்றால் உரியவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். இளைஞரைப் பறிகொடுத்த அந்தக் குடும்பத்திற்கு எப்படி ஆறுதல் கூறுவது என்றே தெரியவில்லை. இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.