கொழும்பு, ஜூலை 6- உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்ட இலங்கையின் யாழ்ப்பாணம் உள்ளிட்ட வட மாகாணங்களில் ராணுவத்தை வெளியேற்றி விட்டு பொதுத்தேர்தலை நடத்த வேண்டும் என இலங்கை அரசை ஐ.நா. சபை வற்புறுத்தி வந்தது.
விடுதலைப் புலிகள் மீண்டும் தலை எடுக்கக்கூடிய அபாயம் உள்ளதால் ராணுவத்தை உடனடியாக வெளியேற்ற முடியாது என இலங்கை அரசு இந்த கோரிக்கையை தட்டிக் கழித்து வந்தது.
மேற்கத்திய நாடுகளும் இதே கோரிக்கையை வலியுறுத்தி இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க தொடங்கின.
இந்நிலையில், வட மாகாண கவுன்சில்களுக்கான தேர்தல்களை நடத்துவதற்கு இலங்கை அதிபர் ராஜபக்ச ஒப்புதல் அளித்துள்ளதாக அரசின் தகவல் துறை டி.ஜி.பி. அரியரத்னே அதுகலா இன்று அறிவித்துள்ளார்.
இதற்கான முறையான அறிவிப்பு இலங்கை தேர்தல் ஆணையத்திற்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் வரும் செப்டம்பர் மாதம் 21 அல்லது 28ம் தேதி வட மாகாண கவுன்சில்களுக்கான தேர்தல் நடைபெறும் எனவும் அவர் இன்று தெரிவித்தார்.
கடந்த 25 ஆண்டுகளுக்கு பிறகு தற்போதுதான் முதன்முறையாக மாகாண கவுன்சில்களுக்கான தேர்தல் நடத்தப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.