கோலாலம்பூர், ஜூலை 8 – 2013 ஆம் ஆண்டிற்கான சுக்மா விளையாட்டுப் போட்டியில் கைப்பந்து விளையாட்டு வீராங்கனை ஒருவர், சக விளையாட்டு வீரர்களால் கற்பழிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக 3 விளையாட்டு வீரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது குறித்து காவல்துறை தற்போது தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது.
கடந்த வாரம் புதன்கிழமை புத்ரா பல்கலைக்கழகத்தின் விளையாட்டு மையத்தில் வைத்து, ஆண் விளையாட்டாளர்கள் குழு இக்குற்றத்தைப் புரிந்ததாகக் கூறப்படுகிறது. இக்குற்றச்செயலை காவல்துறை மிகக் கடுமையான ஒன்றாகக் கருதுகிறது என்று தேசிய காவல்துறைத் தலைவர் டான்ஸ்ரீ காலிட் அபு பக்கார் தெரிவித்தார்.
இச்சம்பவம் நாட்டின் விளையாட்டுத் துறைக்கே களங்கம் ஏற்படுத்தும் படியாக உள்ளதால், காவல்துறை இவ்விவகாரத்தில் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று கூறப்படுகிறது.
கற்பழிக்கப்பட்டதாகக் கூறப்படும் அந்த 19 வயது பெண் விளையாட்டாளர், பல்கலைக்கழகத்தின் தங்கும் அறையில் அரைத் தூக்கத்தில் இருந்த போது மாறி மாறி கற்பழிக்கப்பட்டதாக பத்திரிக்கைத் தகவல்கள் கூறுகின்றன.
இது குறித்து அவர் செர்டாங் காவல்நிலையத்தில் புகார் அளித்ததைத் தொடர்ந்து, அவர்கள் மூவரும் விசாரணைக்காக தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.