கோலாலம்பூர், ஜூலை 15 – கடந்த ஆண்டு பேர்சே இயக்க உறுப்பினர்களுக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட சிவில் வழக்கை நீதிமன்றத்திற்கு வெளியே பேசித் தீர்த்துக்கொள்ளும் வாய்ப்புகள் குறித்து அரசாங்கமும், பெர்சே இயக்கமும் ஆராய்ந்து வருகிறது.
இன்று முதல் தொடர்ந்து நான்கு நாட்கள் நடைபெறவுள்ள இவ்விசாரணை, அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 16 மற்றும் 17 ஆம் தேதி வரை தொடரும் என்று பெர்சே இணைத்தலைவர் அம்பிகா ஸ்ரீனிவாசன் தெரிவித்தார்.
“இப்பிரச்சனையை சுமூகமாகத் தீர்ப்பது குறித்து நாங்கள் கலந்தாலோசித்து வருகிறோம். ஒருவேளை வரும் ஜனவரி மாதத்திற்குள் இப்பிரச்சனை தீர்க்கப்படவில்லை என்றால், நாங்கள் நீதிமன்ற விசாரணைக்கு செல்வோம்” என்று கூறியுள்ளார்.
இவ்வழக்கு கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் இன்று நீதிபதி ஜான் லூயிஸ் ஓ ஹரா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
கடந்த வருடம் ஏப்ரல் மாதம் 28 ஆம் தேதி, தேர்தலை முறைப்படி தூய்மையாக நடத்த வேண்டும் என்று கூறி, பெர்சே நடத்திய ஆர்ப்பாட்டத்தின் விளைவால் ஏற்பட்ட சேதம் காரணமாக, அரசாங்கம் அம்பிகா ஸ்ரீனிவாசன் உட்பட, அவ்வியக்கத்தின் 9 உறுப்பினர்கள் மீது சிவில் வழக்குத் தொடுத்தது குறிப்பிடத்தக்கது.