Home அரசியல் “ஜசெக பதிவு ரத்து செய்யப்பட்டால், ‘ஜசெக பாரு’ தொடங்க முடியாது” – சங்கப் பதிவிலாகா எச்சரிக்கை

“ஜசெக பதிவு ரத்து செய்யப்பட்டால், ‘ஜசெக பாரு’ தொடங்க முடியாது” – சங்கப் பதிவிலாகா எச்சரிக்கை

725
0
SHARE
Ad

Datuk-Abdul-Rahman-Othmanகோலாலம்பூர், ஜூலை 26 – ஜ.செ.க கட்சியின் பதிவு நிரந்தரமாக ரத்து செய்யப்படும் என்றும், அவர்கள் புதிய கட்சி துவங்குவதற்காக விண்ணப்பித்தாலும் அது ஏற்றுக்கொள்ளப்படாது என்றும் சங்கப் பதிவிலாகா ( Registrar of Societies – ROS) கூறியுள்ளது.

இது குறித்து சங்கப் பதிவிலாகாவின் தலைமை இயக்குனர் டத்தோ அப்துல் ரஹ்மான்  ஓத்மான் கூறுகையில், “அவர்கள் புதிய கட்சியை துவங்கலாம். ஆனால் அதை அனுமதிக்கும் உரிமை சங்கப் பதிவிலாகாவிடம் உள்ளது. கடந்த 5 வருடங்களில் புதிய கட்சிகளைத் துவங்க இதுவரை 29 விண்ணப்பங்கள் வந்துள்ளன. நாங்கள் அதை அனுமதிக்கவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

அதோடு, “அவர்கள் புதிய கட்சியை துவங்குவதை விட தற்போதுள்ள கட்சியை தற்காப்பதற்கான நடவடிக்கைகளை ஜசெக உறுப்பினர்களும், அதன் தலைவர்களும் மேற்கொள்ள வேண்டும்” என்றும் அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

‘ஜசெக பாரு’ என்ற புதிய பெயரோடு விண்ணப்பம் செய்யப்பட்டு அது நிராகரிக்கப்பட்டால், அம்னோ கட்சி பதிவு ரத்து செய்யப்பட்ட போது முன்னாள் பிரதமர் டாக்டர் மாகாதீர் ஆரம்பித்த அம்னோ பாருவிற்கு உடனடியாக அனுமதியளித்த சங்கப் பதிவிலாகா குறித்து எதிர்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்கள்.

இது குறித்து அப்துல் ரஹ்மானிடம் கேட்கப்பட்டபோது, “இந்த இரு விவகாரங்களையும் ஒப்பிடக்கூடாது. அம்னோ விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட்டது. ஆனால் ஜசெக விவகாரத்தில் சங்கப்பதிவிலாக தலையிட்டுள்ளது” என்று பதிலளித்துள்ளார்.

கடந்த 2012 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 15 ஆம் தேதி நடைபெற்ற கட்சி தேர்தலில், வாக்குகள் கணக்கீட்டில் தவறு நடந்துள்ளது என்று ஜசெக பொதுச்செயலாளர் லிம் குவான் எங் கடந்த ஜனவரி மாதம் 4 ஆம் தேதி அறிக்கை வெளியிட்டார்.

அதன் பிறகு சங்க பதிவிலாகா பல்வேறு விசாரணைகளை மேற்கொண்டு, தேசிய காங்கிரஸில் கலந்து கொள்ளத் தகுதியுள்ள பல ஜசெக உறுப்பினர்கள், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 15 ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்திற்கு அழைக்கப்படவில்லை என்று அறிக்கை வெளியிட்டது.