ஐதராபாத், ஜூலை 31–தெலுங்கானா மாநிலம் உதயமாகப் போகிறது என்ற எதிர்பார்ப்பு கடந்த 2 நாட்களாக ஆந்திரா முழுவதும் பரவி இருந்தது.
நேற்று மாலை காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்ட தீர்மானம் மூலம் தெலுங்கானா மாநிலம் உதயமாவது உறுதியானதும் தெலுங்கானா பகுதி மக்களிடம் உற்சாகமும், மகிழ்ச்சி வெள்ளமும் கரை புரண்டோடியது.
தெலுங்கானா மாநிலத்துக்குட்பட்ட 10 மாவட்ட மக்களும் புதிய மாநில வெற்றியை பட்டாசு வெடித்து கொண்டாடினார்கள். தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி கட்சித் தொண்டர்கள் இனிப்பு வழங்கினார்கள்.
ஐதராபாத்தில் உள்ள தெலுங்கானா பவன் முன்பு ஆயிரக்கணக்கான தெலுங்கானா ராஷ்டீரியா சமிதி தொண்டர்கள் திரண்டனர். அவர்கள் தெலுங்கானா மாநிலத்தை வரவேற்று வாழ்த்தி கோஷமிட்டனர்.
ஐதராபாத்தில் உள்ள உஸ்மானியா பல்கலைக் கழகத்திலும் கோலாகல கொண்டாட்டத்தை காண முடிந்தது. தெலுங்கானா தனி மாநில போராட்டத்துக்கு முதுகெலும்பாக திகழ்ந்தது உஸ்மானியா பல்கலைக்கழக மாணவர்கள்தான்.
இதனால் தெலுங்கானா அறிவிப்பால் மாணவர்கள்தான் அதிக உற்சாகத்துடன் காணப்பட்டனர். அவர்கள் ஒருவரை ஒருவர் கட்டிப் பிடித்து வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.
தெலுங்கானாவின் 10 மாவட்டங்களிலும் நேற்றிரவும், இன்றும் ‘‘ஜெய் தெலுங்கானா’’ என்ற கோஷம் கேட்டபடி இருந்தது.