கோலாலம்பூர், ஜூலை 31 – ஜசெக கட்சியின் மத்திய செயற்குழு செல்லாது என்று அறிவிக்கும் கடிதம் ஒன்று சங்கப் பதிவாளர் அலுவலகத்தில் இருந்து அனுப்பபட்டுள்ளது.
நேற்று மாலை 5 மணியளவில் கோலாலம்பூரிலுள்ள ஜசெக தலைமையகத்தில் நேரடியாக வழங்கப்பட்டதாக அதன் ஒருங்கிணைப்பு செயலாளர் அந்தோணி லோக் (படம்) கூறினார்.
எனினும், சங்கப் பதிவிலாகா என்ன காரணத்திற்காக மத்திய செயற்குழுவை செல்லாது என அறிவித்துள்ளது பற்றி அந்த கடிதத்தில் குறிப்பிடவில்லை.
அந்த கடிதத்தில் சங்கப் பதிவிலாகாவின் மூத்த இயக்குனரான தேஸ்மாண்டு தாஸ் கையெழுத்திட்டிருப்பதாக லோக் தெரிவித்துள்ளார்.
இதனிடையே ஜசெக பொதுச்செயலாளர் லிம் குவான் எங் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “மிக சுருக்கமான விளக்கத்துடன் கூடிய சங்கப் பதிவிலாகாவின் கடிதத்தை கண்டவுடன் அது அரசியல் நோக்கம் கொண்டதாகத் தான் இருக்கும் என்று தெரிந்தது. ஜூலை 30 ஆம் தேதி வெளியிடப்பட்டுள்ள அக்கடிதத்தில், ஜசெகவின் விளக்கங்கள் திருப்தி அளிக்கும் வகையில் இல்லை என்று மட்டும் தெரிவிக்கப்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “அக்கடிதத்தில் எந்த ஒரு காரணமும் குறிப்பிடப்படவில்லை, இதன் மூலம் சங்கப் பதிவிலாகா முறைகேடாக செயல்பட்டு, அதிகார துஷ்பிரயோகம் செய்து ஜசெகவிற்கு அநீதி இழைத்துள்ளது தெளிவாகிறது” என்றும் லிம் தெரிவித்தார்.