கோலாலம்பூர், ஆகஸ்ட் 22 – ம.இ.கா தேசியத் தலைவர் பதவிக்குப் போட்டியிடுவதில் அக்கட்சியின் நடப்பு தேசியத் தலைவரான டத்தோஸ்ரீ ஜி. பழனிவேலுக்கும், துணை தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்ரமணியத்திற்கும் இடையே ஏற்பட்டுள்ள சமாதான உடன்படிக்கை குறித்து விளக்கமளிப்புக் கூட்டம் இன்று காலை ம.இ.கா தலைமையகத்தில் நடைபெற்றது.
அக்கூட்டத்தில் ம.இ.கா நடப்பு தேசிய உதவித் தலைவர்களான டத்தோ சரவணன், டத்தோ தேவமணி உட்பட பல முக்கியத் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
அதன் பிறகு நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில், ம.இ.கா தேசியத் தலைவர் பதவிக்கும், தேசியத் துணைத்தலைவர் பதவிக்கும் போட்டியில்லை என்று பழனிவேல் அறிவித்தார்.
இருப்பினும், கட்சியின் தேசிய உதவித்தலைவர் பதவிக்கு போட்டியிருக்கலாம் என்பதையும் பழனிவேல் குறிப்பிட்டார்.
இம்முடிவு குறித்து சரவணன் செய்தியாளர்களிடம் கூறுகையில், “கட்சியின் மிக முக்கியமானது தலைவர் மற்றும் துணைத்தலைவர் பதவி. இந்த இரு பதவிகளுக்கும் போட்டியின்றி சுமூகமாக தலைவர்களைத் தேர்ந்தெடுப்பதற்கு வழிவகுத்த பழனிவேலின் தலைமைத்துவத்திற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்”
“கட்சியினுடைய நிலைப்பாடு நிரந்தரமாக எதிர்கால சமூதாயத்தை முன்னிருத்தி செல்ல வேண்டும். அதே நேரத்தில் வரக்கூடிய உதவித்தலைவர் தேர்தலில் என்னுடைய பதவியைத் தற்காத்துக் கொள்வேன். எல்லா நேரத்திலும் போட்டியிருக்கக் கூடாது என்று நினைத்தால் புதிய தலைவர்கள் வரமுடியாது. எனவே உதவித்தலைவருக்கு போட்டி இருப்பதை நான் வரவேற்கிறேன்” என்று தெரிவித்தார்.
மேலும்,“போட்டி என்பது போட்டியாக இருக்கும் வரை எந்த பிரச்சனையும் இல்லை என்றும், அது பொறாமையாகவும், காழ்ப்புணர்ச்சியாகவும் மாறிவிடக்கூடாது” என்றும் சரவணன் தெரிவித்தார்.
தேசியத் தலைவர் பதவி போட்டியின்றி தேர்ந்தெடுப்பது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்த சரவணன், “ தலைவருக்கும், துணைத் தலைவருக்கும் இடையில் தான் போட்டியில்லை. வேறு யாரும் அப்பதவிக்குப் போட்டியிட முடியாது என்று சொல்லவில்லை” என்று தெரிவித்தார்.
– பீனிக்ஸ்தாசன்