Home அரசியல் ஹிஷாமுடினும் வேதமூர்த்திக்கு எதிராக போர்க்கொடி! துணையமைச்சர் பதவியிலிருந்து விலகுவாரா?

ஹிஷாமுடினும் வேதமூர்த்திக்கு எதிராக போர்க்கொடி! துணையமைச்சர் பதவியிலிருந்து விலகுவாரா?

596
0
SHARE
Ad

waythaஆகஸ்ட் 25 – தேசிய முன்னணிக்கு ஆதரவாளராக மாறி இந்தியர் பிரச்சனையை தீர்த்து வைக்கின்றேன் என்ற முழக்கத்தோடு, பொதுத் தேர்தல் முடிந்தவுடன் தேசிய முன்னணி அரசாங்கத்தில் துணையமைச்சராகப் பதவியேற்ற பி.வேதமூர்த்தி தற்போது நிகழ்ந்து வரும் சம்பவங்களால் இக்கட்டான சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். இதனால், துணையமைச்சர் பதவியை அவர் தூக்கி எறிந்து விட்டு அரசாங்கத்திலிருந்து வெளியேறுவரா என்ற பரபரப்பான எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

காவல் துறையினரின் துப்பாக்கி சூடுகளுக்கு விசாரணையின்றி இந்தியர்கள் பலியாகின்றார்கள் என்ற குற்றச்சாட்டை எழுப்பித்தான் ஹிண்ட்ராப் இயக்கத்தினரும், அதன் தலைவர்களான வேதமூர்த்தி போன்றவர்களும் மக்கள் மத்தியில் பிரபல்யமடைந்தார்கள்.

இப்போதும் அதே போன்று ஒரு சம்பவம். கடந்த சில நாட்களுக்கு முன்பாக ஐந்து இந்தியர்கள் காவல்துறையினரால் பினாங்கில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

ஆனால் வேதமூர்த்தியோ தற்போது அரசாங்கத்தில் துணையமைச்சர். இந்நிலையில் அவர் என்ன செய்யப் போகின்றார் என்பதை இந்திய சமுதாயமும் எதிர்பார்த்துக் காத்திருந்தது.

வேதமூர்த்தியில் ஆட்சேபமும், அகமட் சாஹிட்டின் சவாலும்….

Ahmad Zahid Hamidiஇந்த சம்பவம் குறித்து வேதமூர்த்தியும் தனது ஆட்சேபக் கருத்தைத் தெரிவித்திருந்தார். அரசாங்கத்தில் பதவி வகிப்பதால் நடக்கின்ற சம்பவங்களைப் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க முடியாது என்று அவர் கூறியிருந்தார். சுடப்பட்டுக் கிடப்பவர்களின் புகைப்படங்களைப் பார்த்தபோது அவர்கள் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டு மரணமடைந்தவர்கள் என்பதை என்னால் நம்ப முடியவில்லை என்றும் வேதமூர்த்தி கூறியிருந்தார்.

அதனைத் தொடர்ந்து அவருக்கு மறைமுகமாக பதிலளித்த உள்துறை அமைச்சர் அகமட் சாஹிட் ஹாமிடி  காவல் துறை அல்லது அரசாங்கத்தின் நடவடிக்கைகள் பிடிக்கவில்லையென்றால் தாராளமாக அரசாங்கத்திலிருந்து பதவி விலகி, அரசு சார்பற்ற இயக்கங்களின் வழி வேதமூர்த்தி போராடலாம் என காட்டமாக கூறியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து ஜனநாயக செயல்கட்சியின் தலைவர் கர்ப்பால் சிங்கும் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் வேதமூர்த்தியின் நிலைப்பாட்டுக்கு பொருத்தமில்லாத ஒன்று என்பதால் அவர் துணையமைச்சர் பதவியிலிருந்து விலக வேண்டும் என சவால் விடுத்திருந்தார்.

ஹிஷாமுடினும் வேதமூர்த்தி கருத்துக்கு எதிர்ப்பு….

hishamuddinநேற்று இது குறித்து கருத்து தெரிவித்த பாதுகாப்புத் துறை அமைச்சர் ஹிஷாமுடின் துன் ஹூசேன் ஓன், பினாங்கில் 5 இந்தியர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் வேதமூர்த்திக்கு அதிருப்தி இருக்குமானால் அவர் தாராளமாக துணையமைச்சர் பதவியிலிருந்து விலகிக் கொள்ளலாம், அதனை நான் ஆதரிக்கின்றேன் என்று கூறியுள்ளார்.

வேதமூர்த்தியால் தனது உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்திக் கொள்ள இயலவில்லை என்றும், அமைச்சரவையின் கூட்டு பொறுப்பை விட தனது அரசியல் நோக்கங்கள்தான் அவருக்கு முக்கியம் என்றும் ஹிஷாமுடின் வேதமூர்த்தியை நேற்று சாடியிருந்தார்.

இதன் தொடர்பில் உள்துறை அமைச்சர் அகமட் சாஹிட்டின் கருத்தை நான் 101 சதவீதம் ஆதரிக்கின்றேன் என்றும் ஹிஷாமுடின் கூறியிருக்கின்றார்.

அகமட் சாஹிட்டுக்கும், எனக்கும் மனிதர்கள் என்ற முறையில் தனிப்பட்ட கருத்துக்கள் இருக்கலாம், ஆனால் அரசாங்க அமைச்சரவையில் உறுப்பினர்கள் என்ற முறையில் நாங்கள் அரசாங்க முடிவுகளுக்கு கூட்டாக பொறுப்பேற்க வேண்டும், குறை சொல்லக்கூடாது என்றும் ஹிஷாமுடின் விளக்கினார்.

இதனைத் தொடர்ந்து வேதமூர்த்தி என்ன நிலைப்பாடு எடுக்கப் போகின்றார், இரண்டு அமைச்சர்கள் சவால் விட்ட பின்னரும் துணையமைச்சராக இன்னும் பதவியில் ஒட்டிக் கொண்டிருக்கப் போகின்றாரா அல்லது சவால்களை ஏற்றுக் கொண்டு தனது துணையமைச்சர் பதவியை தூக்கியெறியப் போகின்றாரா என்பதைக் காண அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.