செப்டம்பர் 1 – இன்று ம.இ.காவின் தேசியத் தலைவராக ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்ட டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல், தனக்கு வழங்கப்பட்ட ஏகோபித்த ஆதரவை முன்னிட்டும், பல கிளைத் தலைவர்களின் வேண்டுகோளுக்கிணங்கவும், 2016க்கும் பிறகும் தான் தேசியத் தலைவராகத் தொடரலாம் என்றும் அந்த முடிவை பின்னர் தான் எடுக்கப் போவதாகவும் இன்று நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் கூறியுள்ளார்.
அவரது இந்த கருத்து, ம.இ.கா வட்டாரங்களில் மீண்டும் பரபரப்பையும், விவாதப் புயலையும் கிளப்பியுள்ளது.
காரணம், இரண்டு வாரங்களுக்கு முன்னர்தான், 2016ஆம் ஆண்டின் முதல் காலாண்டில், தான் கட்சியின் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்ரமணியத்திடம் தேசியத் தலைவர் பதவியை விட்டுக் கொடுத்துவிட்டு விலகுவேன் என்று பழனிவேல் கூறியிருந்தார்.
ஆனால், இன்று 617 நியமனப் பாரங்களைப் பெற்று, அதன்வழி 3,700க்கும் மேற்பட்ட கிளைத் தலைவர்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்று, தேசியத் தலைவராக மேலும் மூன்று ஆண்டுகளுக்கு பழனிவேல் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
ஒவ்வொரு வேட்பாளர் மனுப் பாரத்திலும் ஒரு ம.இ.கா.கிளைத் தலைவர் முன்மொழிய, மேலும் 5 கிளைத் தலைவர்கள் வழிமொழிய வேண்டும். அதன்படி, கிடைத்த 617 நியமனங்களின் மூலம் 3,702 கிளைத் தலைவர்களின் ஆதரவை பழனிவேல் இன்று பெற்றுள்ளார்.
பழனிவேலுவின் வெற்றி அறிவிப்பைத் தொடர்ந்து நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றிற்கு பதிலளித்த பழனிவேல், நிறைய கிளைத் தலைவர்கள் தான் தொடர்ந்து தலைவராக இருக்க வேண்டுமென வற்புறுத்தி வருவதால், அந்த ஆதரவைத் தான் ஒதுக்கித் தள்ள முடியாது என்றும், எனவே, தான் 2016க்கும் பின்னரும் தேசியத் தலைவராகத் தொடரலாம் என்றும் கூறினார்.
இதனால், பழனிவேலுவின் ஆதரவாளர்கள் உற்சாகம் அடைந்திருக்கின்றார்கள் என்பதோடு, அடுத்த இரண்டரை ஆண்டுகளில் சுப்ரா தேசியத் தலைவராகப் பதவியேற்பார் என எதிர்பார்ப்போடு இருந்த அவரது ஆதரவாளர்கள் தற்போது மனம் தொய்வடைந்திருக்கின்றார்கள்.