Home நாடு 3,620 மஇகா கிளைகளின் ஆதரவுடன் விக்னேஸ்வரன் தேசியத் தலைவராக தேர்வு

3,620 மஇகா கிளைகளின் ஆதரவுடன் விக்னேஸ்வரன் தேசியத் தலைவராக தேர்வு

625
0
SHARE
Ad
விக்னேஸ்வரன் தேசியத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதை உறுதிப்படுத்தும் கடிதம் வழங்கும் ராஜூ

கோலாலம்பூர் : இன்று புதன்கிழமை (26 மே 2021) காலை 11.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை மஇகா தலைமையகத்தில் நடைபெற்ற மஇகா தேசியத் தலைவருக்கான வேட்புமனுத் தாக்கலின்போது நடப்பு மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் போட்டியின்றி ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அவருக்கு 1810 வேட்புமனுப் பாரங்கள் ஆதரவாக மஇகா கிளைகளால் சமர்ப்பிக்கப்பட்டன. ஒவ்வொரு வேட்புமனுப் பாரத்திலும் ஒரு கிளைத் தலைவர் முன்மொழிந்து இன்னொரு கிளைத் தலைவர் வழிமொழிய வேண்டும் என்பதால் அவருக்கு மொத்தமுள்ள மஇகா கிளைகளில் 3,620 கிளைகள் ஆதரவு தெரிவித்திருக்கின்றன.

தேசியத் தலைவர் தேர்தல் முடிவுகளை அதிகாரபூர்வமாக அறிவிக்கும் டான்ஸ்ரீ இராஜூ…இடது புறத்தில் டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி; வலது புறத்தில் டத்தோ ஆர்.கணேசன்

மஇகாவின் தேசியத் தலைவருக்கான 2021-2021 தவணைக்கான தேர்தல் குழுவின் தலைவர் டான்ஸ்ரீ ஜி.இராஜூ வேட்புமனுத் தாக்கலின் முடிவுகளை பிற்பகல் 1.00 மணிக்குப் பிறகு அதிகாரபூர்வமாக அறிவித்தார்.

#TamilSchoolmychoice

“மஇகா தேசியத் தலைவர் தேர்தல் தொடர்பிலான சுற்றறிக்கைகளும் வேட்புமனுத் தாக்கல் பாரங்களும் மஇகா தலைமையகத்தால் எல்லா கிளைக் காங்கிரஸ் தலைவர்களுக்கும் அனுப்பப்பட்டு அந்த வேட்புமனுப் பாரங்களைப் பூர்த்தி செய்து தத்தம் தொகுதிக் காங்கிரஸ் தலைவர்களிடம் ஒப்படைக்குமாறு அவர்களிடம் கேட்டுக் கொள்ளப்பட்டது. மஇகா அமைப்பு விதிகள் 58.6-இன்படி வேட்பாளர்கள் தங்களின் பிரதிநிதிகள் மூலம் வேட்புமனுப் பாரங்களைப் பெற்றுக் கொண்டு தேர்தல் குழுவிடம் இன்று ஒப்படைக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டனர். நடப்பிலிருக்கும் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணைக்கு ஏற்பவும் அதன் தொடர்பிலான நிபந்தனைகளுக்கு ஏற்பவும் ஒவ்வொரு மாநிலத்தின் சார்பிலும் ஒரே ஒரு பிரதிநிதி மட்டும் இன்று வேட்புமனுத் தாக்கல்களைச் சமர்ப்பித்தனர்” என டான்ஸ்ரீ இராஜூ தெரிவித்தார்.

மாலையணிவித்து வாழ்த்து தெரிவிக்கும் டத்தோஸ்ரீ எம்.சரவணன்

“இன்று வேட்புமனுத் தாக்கல்களுக்கான நேரம் முடிவுற்ற போது, அவ்வாறு சமர்ப்பிக்கப்பட்ட வேட்புமனுத் தாக்கல்களில் ஒரே ஒரு வேட்பாளர் அதாவது டான்ஸ்ரீ டத்தோஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் அவர்கள் மட்டுமே தேசியத் தலைவர் பதவிக்கு முறைப்படி முன்மொழியப்பட்டுள்ளார் என்பதை இதன்வழி உறுதிப்படுத்துகிறேன். வேட்புமனுத் தாக்கல்களுக்கான நேரம் முடிவுற்றபோது துணை சட்டவிதிகள் 4.3-இன்படி PE-1 என்ற வேட்புமனுப் பாரங்கள் மொத்தம் 1,810 என்ற எண்ணிக்கையில் சமர்ப்பிக்கப்பட்டன என்பதையும் இதன்வழி உறுதிப்படுத்துகிறேன்” எனவும் இராஜூ வேட்புமனுத் தாக்கலுக்குப் பிறகு நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் அறிவித்தார்.

“டான்ஸ்ரீ டத்தோஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் அவர்கள் மலேசிய இந்தியர் காங்கிரசின் தேசியத் தலைவராக, மூன்றாண்டுகள் கொண்ட தவணைக்கு அல்லது மஇகா அமைப்பு விதி 58.2-இன்படி அடுத்த தேசியத் தலைவர் தேர்தல் நடைபெற்று முடியும் வரை, போட்டியின்றி  தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்பதை மஇகா அமைப்பு விதிகள் 58.3 மற்றும் 58.12 ஆகியவற்றின் கீழ் எனக்கு வழங்கப்பட்டிருக்கும் அதிகாரங்களின்படி, டான்ஸ்ரீ ஜி.இராஜூ என்ற நான், இதன்வழி அதிகாரபூர்வமாக அறிவிக்கின்றேன்” என இராஜூ குழுமியிருந்தவர்களின் கரவொலிகளுக்கிடையில் அறிவித்தார்.

அப்போது வேட்புமனுத் தாக்கல் நடைபெற்ற மண்டபத்தில் விக்னேஸ்வரனும் அமர்ந்திருந்தார்.

இராஜூவின் அதிகாரபூர்வ அறிவிப்புக்குப் பின்னர் விக்னேஸ்வரன் தேசியத் தலைவர் என்ற முறையில் உரையாற்றியதோடு, பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கும் பதிலளித்தார்.