கோலாலம்பூர் : இன்று புதன்கிழமை (26 மே 2021) காலை 11.00 மணிக்கு மஇகா தலைமையகத்தில் தொடங்கிய மஇகா தேசியத் தலைவருக்கான வேட்புமனுத் தாக்கலின்போது நடப்பு மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரனைத் தவிர்த்து வேறு எந்த வேட்புமனுவும் பெறப்படவில்லை என மஇகா வட்டாரங்கள் தெரிவித்தன.
தேசியத் தலைவருக்கு போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் அந்தப் பதவிக்குப் போட்டியிடுவதற்கான தகுதிகள் இருப்பதை நிரூபிக்கும் அத்தாட்சிக் கடிதம் ஒன்றை மஇகா தலைமையகத்திடம் இருந்து பெற வேண்டும். இதுவரையில் அவ்வாறு எந்த ஓரு வேட்பாளரும் மஇகா தலைமையகத்திடம் இருந்து அத்தாட்சிக் கடிதத்தையும் பெறவில்லை எனவும் மஇகா வட்டாரங்கள் தெரிவித்தன.
இதைத் தொடர்ந்து இன்று பிற்பகல் 1.00 மணியளவில் வேட்புமனுத் தாக்கல் முடிவுறும்போது விக்னேஸ்வரன் போட்டியின்றி மஇகாவின் 10-வது தலைவராக இரண்டாவது தவணைக்கு மீண்டும் தேர்ந்தெடுக்கப்படுவார் என்பது உறுதியாகியிருக்கிறது.
அடுத்த மூன்றாண்டுகளுக்கு அல்லது அடுத்த தேசியத் தலைவர் தேர்தல் நடைபெறும்வரை விக்னேஸ்வரன் மஇகா தலைவராக நீடிப்பார்.
நாடு தழுவிய நிலையில் அனைத்து மாநில மஇகாவினரும், கிளைகளும், தொகுதிகளையும் விக்னேஸ்வரனையே தேசியத் தலைவராகத் தொடர்வதற்கு முன்மொழிந்திருக்கின்றனர்.
இன்று வேட்புமனுத் தாக்கலுக்கான நேரம் முடிந்ததும் தேர்தல் குழுத் தலைவரான டான்ஸ்ரீ ஜி.இராஜூ விக்னேஸ்வரன் தேர்ந்தெடுக்கப்பட்டதை அதிகாரபூர்வமாக அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.