இஸ்லாமாபாத்,செப்.5- பாராளுமன்றத்தில் உணவு பாதுகாப்பு மசோதா மீது கடந்த மாதம் 26–ந்தேதி நடந்த விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய சோனியா காந்திக்கு, திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவர் மறுநாள் வீடு திரும்பினார்.
சோனியா காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற போது, பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் சார்பில் வாழ்த்துச்செய்தியும், மலர்க்கொத்தும் அனுப்பி வைக்கப்பட்ட செய்தி தற்போது வெளியாகி உள்ளது.
புதுடெல்லியில் உள்ள அந்நாட்டு தூதரகம் மூலம் இந்த மலர்க்கொத்து எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
அதில் ‘விரைவில் குணம்பெற வாழத்துக்கள்’ என்ற வாசகமும் எழுதப்பட்டு இருந்தது. கடந்த 6–ந்தேதி காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் இந்திய வீரர்கள் 5 பேர் உயிரிழந்தனர்.
இதைத்தொடர்ந்து இரு நாடுகளுக்கு இடையே பெரும் பதற்றம் நிலவி வரும் சூழ்நிலையில் பாகிஸ்தான் பிரதமரின் இந்த நடவடிக்கை வியப்பை ஏற்படுத்தி உள்ளது.