கோலாலம்பூர், செப் 9 – கடந்த வாரம் ஜாலான் பி ரம்லியில் அமைந்துள்ள 101 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவிலின் ஒரு பகுதியை கோலாலம்பூர் மாநகராட்சி சபை (டிபிகேஎல்) இடிக்கவில்லை என்றும், அதிலுள்ள ஒரு கடையைத் தான் உடைத்தது என்றும் கூட்டரசுப் பிரதேச அமைச்சர் தெங்கு அட்னான் தெங்கு மன்சோர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “நானும் சமயப் பற்றுள்ளவன் தான். தொழுகை செய்பவன் தான். மற்ற இனத்தவர்கள் வழிபாடு நடத்தும் இடத்தை உடைக்க நான் அனுமதிக்கவில்லை” என்று தெரிவித்தார்.
மேலும் “அந்த சிறுகோயிலை டிபிகேஎல் இடிக்கவில்லை. மாறாக அதன் தரத்தை உயர்த்தி சுற்றுப்பயணிகள் அனைவரையும் கவரும் இடமாக மாற்ற திட்டமிட்டிருக்கிறோம். அதே நேரத்தில் அங்கு அரசாங்க நிலத்தை சட்டவிரோதமாக ஆக்கிரமித்திருந்த கடை மற்றும் குடியிருப்புகள் தான் உடைக்கப்பட்டன” என்றும் தெங்கு அட்னான் குறிப்பிட்டார்.
இந்த விவகாரத்தில் கடந்த செப்டம்பர் 5 ஆம் தேதி கருத்துரைத்த மஇகா இளைஞர் பிரிவு செயலாளர் சி.சிவராஜா, “ஒரு சிறுவனுக்குக் கூட தெரியும் இடிக்கப்பட்டது கோயிலா அல்லது கடையா என்பது.தெங்கு அட்னான் கூறிவருவது பொய்யான தகவல்.இந்துக்களின் கலாச்சாரங்களையும், பண்பாடுகளையும் அவர் முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்” என்று சாடியிருந்தார்.