கோலாலம்பூர், செப் 9 – கடந்த வாரம் பெட்ரோல் விலை உயர்ந்தது. அதைக் காரணம் காட்டி அடுத்ததாக காய்கறி விலையும் உயர்ந்தது. இந்த வருட இறுதிக்குள் பள்ளி பேருந்து கட்டணமும் உயர்ந்து விடும் என்று கூறப்படுகிறது.
நிலப் போக்குவரத்து ஆணையம் (Land Transport Commission) தற்போது பள்ளிப் பேருந்து கட்டணம் குறித்து ஆய்வு செய்து வருவதாகவும், இந்த வருட இறுதிக்குள் அதன் முடிவுகள் தெரிந்துவிடும் என்றும் தி நியூ ஸ்ரேய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
“பள்ளிப் பேருந்து ஓட்டுநர்கள் கிலோமீட்டரை அடிப்படையாகக் கொண்டு அதற்கான கட்டணத்தை பெற்றோர்களிடம் வாங்குவது மிகவும் கஷ்டம் என்று ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது. எனவே ஆணையம் தற்போது புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி கட்டணத்தை வசூலிப்பது குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறது” என்று நில போக்குவரத்து ஆணையத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், ஆணையம் தற்போது பெட்ரோல் விலை உயர்வைக் காரணம் காட்டி பள்ளி பேருந்து ஓட்டுநர்கள் தங்கள் கட்டணத்தை உயர்த்துவதற்கு அனுமதி வழங்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.
இதனிடையே, சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் காய்கறி விலை உட்பட அனைத்து காய்கறிகளின் விலையும் பெட்ரோல் விலையேற்றம் மற்றும் மழை காரணமாக உயர்ந்துவிட்டதாக தி ஸ்டார் பத்திரிக்கை கூறுகிறது.
“காய்கறி விநியோகஸ்தர்கள் ஏற்கனவே கூடுதல் காய்கறிகளை கிடங்கில் சேமித்து வைத்திருந்தாலும், பெட்ரோல் விலை உயர்வைக் காரணம் காட்டி கிலோவிற்கு 20 காசு உயர்த்திவிட்டனர்” என்று காய்கறி விற்பனையாளர் ஒருவர் நாளிதழ் ஒன்றுக்கு தகவல் அளித்துள்ளார்.