கோலாலம்பூர், செப் 9 – உள்துறை அமைச்சர் சாஹிட் ஹமீடி எதிர்வரும் அம்னோ கட்சித் தேர்தலை முன்வைத்து தான் ஓப்ஸ் கந்தாஸ் நடவடிக்கைகளை அறிவித்து அரசியல் ஆதாயம் தேடுவதாக பிகேஆர் கூறுவதை வன்மையாகக் கண்டித்துள்ளார்.
“அது போன்ற மலிவு அரசியல் விளம்பரம் எனக்குத் தேவையில்லை. ஓப்ஸ் கந்தாஸ் நடவடிக்கையை அறிவித்தது காவல்துறை, குண்டர் கும்பல் பட்டியலை வெளியிட்டது எனது அமைச்சரவை தலைமைச் செயலாளர். அதை நான் எனது தனிப்பட்ட நலனுக்காக அறிவிக்கவில்லை. அப்படி ஒரு தேவையும் எனக்கு இல்லை” என்று சாஹிட் ஆத்திரமாக செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
மேலும், இந்த குற்றங்களுக்கு எதிரான நடவடிக்கைகள் அனைத்தும் இந்த நாட்டின் நலனுக்காக எடுக்கப்பட்டது என்றும், தான் யாருக்கும் எச்சரிக்கை விடுக்கவில்லை மாறாக சட்டங்களுக்கு கீழ் படிந்து நடக்க வேண்டும் என்று தான் அனைவரையும் கேட்டுக்கொள்வதாகவும் சாஹிட் தெரிவித்துள்ளார்.
வரும் அம்னோ கட்சித் தேர்தலில் சாஹிட் தனது உதவித்தலைவர் பதவியை தற்காத்துக்கொள்ளவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.