Home உலகம் 56 வருடங்களுக்குப் பிறகு தோக்கியோவுக்கு திரும்பும் ஒலிம்பிக்ஸ்! ஜப்பான் எங்கும் உற்சாக வெள்ளம்!

56 வருடங்களுக்குப் பிறகு தோக்கியோவுக்கு திரும்பும் ஒலிம்பிக்ஸ்! ஜப்பான் எங்கும் உற்சாக வெள்ளம்!

618
0
SHARE
Ad

Olympics-Logo-Featureசெப்டம்பர் 9 – எதிர்வரும் 2020ஆம் ஆண்டில் ஒலிம்பிக்ஸ் விளையாட்டுப் போட்டிகளை ஏற்று நடத்த தோக்கியோ தேர்வு செய்யப்பட்டுள்ளதைத் தொடர்ந்து ஜப்பான் நாடு முழுமையிலும் உற்சாக வெள்ளம் கரைபுரண்டு ஓடுகின்றது.

#TamilSchoolmychoice

அர்ஜெண்டினாவின் தலைநகரான புவனஸ் ஏர்ஸ் நகரில் நடைபெற்ற ஒலிம்பிக்ஸ் மன்றக் கூட்டத்தில் நடந்த வாக்கெடுப்பில் ஸ்பெயின்நாட்டின் மாட்ரிட் நகரம்,தோக்கியோ, துருக்கியின் இஸ்தான் புல் ஆகிய நகர்களுக்கிடையில் கடும் போட்டி நிலவியது.

முதல் சுற்று வாக்கெடுப்பில் மாட்ரிட் நிராகரிக்கப்பட, இறுதிக் கட்டத்தில் இஸ்தான்புல், தோக்கியோ நகர்களுக்கிடையில் நடைபெற்ற வாக்கெடுப்பில் தோக்கியோ 60 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றது. இஸ்தான்புல் 36 வாக்குகளைப் பெற்றது.

இதற்கு முன் 1964ஆம் ஆண்டில் ஜப்பானின் தோக்கியோ நகரில் ஒலிம்பிக்ஸ் ஏற்கனவே நடந்தேறியுள்ளது. ஆக, 56 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இந்த விளையாட்டுப் போட்டிகள் தங்கள் நாட்டுக்குத் திரும்புவதாலும், இதனால் நாட்டின் மதிப்பும், பொருளாதார சூழ்நிலையும் கூடும் என்பதாலும் ஜப்பான் அரசாங்கமும், மக்களும் உற்சாகமடைந்துள்ளனர்.

பாதுகாப்பான நகர்

தற்போதைய சூழ்நிலையில் ஒலிம்பிக்ஸ் நடத்துவதற்கு பாதுகாப்பான நகர் என்ற அடிப்படையை முன்வைத்துத்தான் தோக்கியோ இந்த தேர்வில் வெற்றி பெற்றுள்ளது. ஃபுக்குஷிமா அணுக்கதிர் கசிவு பிரச்சனை ஒரு தடங்கலாக இருந்தாலும், மற்ற அம்சங்களை முன்வைத்து ஜப்பானின் பிரதமர் ஷின்சோ அபே, ஒலிம்பிக்ஸ் மன்ற உறுப்பினர்களிடையே நேரடியாக தனது நாட்டை சிபாரிசு செய்து உரையாற்றினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தோக்கியோ தேர்வானது குறித்து தான் பெரும் மகிழ்ச்சியில் திளைத்திருப்பதாகவும், 2011ஆம் ஆண்டு ஜப்பானில் நடந்த பூகம்பம் மற்றும் சுனாமி பேரிடர்களுக்கு உலக நாடுகள் காட்டிய ஆதரவிற்கு பிரதிபலனாக சிறப்பான ஒலிம்பிக்ஸ் போட்டிகளை நடத்திக் காட்டுவோம் என்றும் ஜப்பானியப் பிரதமர் அபே கூறியுள்ளார்.

1964ஆம் ஆண்டு, ஜப்பானில் ஒலிம்பிக்ஸ் நடந்தேறியபோது சிறுவனாக இருந்த தனக்கு அது ஆழமான பாதிப்பை ஏற்படுத்தியதாகவும் அபே கூறியுள்ளார்.

கோடிக்கணக்கான செலவினங்கள்

ஒலிம்பிக்ஸ் போட்டிகளுகளுக்காக ஜப்பான் 6 பில்லியன் அமெரிக்க வெள்ளி வரை செலவழிக்கும் என அறிவித்துள்ளது. ஏற்கனவே, பெரும் செலவினங்களைக் கொண்ட வசதிகளை அந்த நாடு செய்து முடித்துவிட்டது.

உதாரணமாக, 4.9 பில்லியன் அமெரிக்க வெள்ளி ஒலிம்பிக்ஸ் நிதியை அது சேமித்து வைத்துள்ளதோடு, 1 பில்லியன் அமெரிக்க வெள்ளி செலவிலான விளையாட்டரங்கம் ஒன்றையும் 2017இல் நடைபெறவிருக்கும் ரக்பி உலகக் கிண்ணப் போட்டிக்காக அது கட்டி முடிக்கவுள்ளது.

கடைசியாக 2012ஆம் ஆண்டில் இலண்டனில் ஒலிம்பிக்ஸ் நடந்தேறியது. அடுத்த ஒலிம்பிக்ஸ் 2016ஆம் ஆண்டு பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோ நகரில் நடைபெறும்.