Home நாடு ஒலிம்பிக்ஸ் கோலாகல நிறைவு : அதிக பதக்கங்களுடன் அமெரிக்கா முதல் நிலை!

ஒலிம்பிக்ஸ் கோலாகல நிறைவு : அதிக பதக்கங்களுடன் அமெரிக்கா முதல் நிலை!

1092
0
SHARE
Ad

தோக்கியோ : நடக்குமா, நடக்காதா என கடந்த ஓராண்டாக விளையாட்டு இரசிகர்களை எதிர்பார்ப்பில் ஆழ்த்தி வந்த தோக்கியோ ஒலிம்பிக்ஸ் ஒரு வழியாக மிகச் சிறப்பான முறையில் நேற்றுடன் (ஆகஸ்ட் 8) கோலாகலமாக நிறைவு பெற்றது.

ஒலிம்பிக்ஸ் அரங்கில் பல்வேறு கண்கவர் நிகழ்ச்சிகளுடன் நிறைவு விழா நடைபெற்று முடிந்தது. பதக்கங்கள் வழங்கும் இறுதி நிகழ்ச்சியாக, ஆண்களுக்கும் பெண்களுக்குமான மராத்தோன் என்ற 26 மைல் நீண்ட தூர ஓட்டத்துக்கான வெற்றியாளர்களுக்கு பதக்கங்கள் வழங்கப்பட்டன.

நிறைவு நிகழ்ச்சியில் பல நாடுகளின் போட்டியாளர்கள் அரங்கிற்குள் அணி வகுத்து வந்து மகிழ்ச்சியை சக போட்டியாளர்களுடன் பகிர்ந்து கொண்டு புகைப்படங்களும் எடுத்துக் கொண்டனர்.

#TamilSchoolmychoice

கொவிட் அச்சத்துக்கு இடையில் ஓராண்டு கழித்து நடத்தப்பட்டாலும், எந்தவித அசம்பாவிதங்களும் இன்றி மிகக் கட்டுக் கோப்புடனும், சிறப்பான ஏற்பாடுகளுடனும், பார்வையாளர்கள் இன்றி நடத்தப்பட்டது தோக்கியோ ஒலிம்பிக்ஸ்.

இருப்பினும் உலகம் எங்கிலும் கோடிக்கணக்கான விளையாட்டு இரசிகர்கள் ஒலிம்பிக்ஸ் போட்டிகளை நேரலையாக இரசித்தனர்.

மலேசியாவில் ஆஸ்ட்ரோவின் சுமார் 10-க்கும் மேற்பட்ட அலைவரிசைகளில் ஒலிம்பிக்சின் பல்வேறு விளையாட்டுகள் நேரலையாக ஒளிபரப்பப்பட்டன.

இனி அடுத்த ஒலிம்பிக்ஸ் 2024-ஆம் ஆண்டில் பாரிஸ் நகரில் நடைபெறும்.

முதல் நிலை வெற்றியாளர் அமெரிக்கா

பதக்கப் பட்டியலில் அமெரிக்கா வழக்கம்போல் மிக அதிகமான பதக்கங்களை வெற்றி கொண்டு தனது ஆதிக்கத்தை ஒலிம்பிக்சில் நிலைநிறுத்திக் கொண்டது.

39 தங்கப் பதக்கங்களுடன் மொத்தம் 113 பதக்கங்களைப் பெற்றது அமெரிக்கா. அடுத்த நிலையில் இரண்டாவதாக சீனா 38 தங்கப் பதக்கங்களுடன் மொத்தம் 88 பதக்கங்களை வெற்றி கொண்டது.

மூன்றாவது நிலையில் ரஷிய விளையாட்டாளர்கள் குழு 20 தங்கப் பதக்கங்களுடன்  மொத்தம் 71 பதக்கங்களைப் பெற்றது.

ஒலிம்பிக்சில் அதிக பதக்கங்களைப் பெற்ற முதல் 10 நாடுகளை மேலே உள்ள படத்தில் காணலாம்.

மலேசியாவுக்கான பதக்கங்கள்

தோக்கியோ ஒலிம்பிக்சிஸ் மலேசியா இரண்டு பதக்கங்களைப் பெற்றது.

மலேசியாவின் சைக்கிள் ஓட்ட வீரர் அசிசுல் ஹாஸ்னி அவாங் நேற்று ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 8) ஒலிம்பிக்ஸ் விளையாட்டுப் போட்டிகளில் இறுதி நாளில் மலேசியாவுக்கு வெள்ளிப் பதக்கம் பெற்றுத் தந்துள்ளார்.

ஆண்களுக்கான சைக்கிள் ஓட்டப் போட்டியில் அவர் வெள்ளிப் பதக்கத்தைப் பெற்றார்.

தோக்கியோ ஒலிம்பிக்சில் மலேசியாவின் முதல் பதக்கத்தை   பூப்பந்துக்கான இரட்டையர் போட்டியில் ஆரோன் சியா – சோ வூய் யிக் இணை பெற்றுத் தந்தது. அவர்களுக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்தது.

எனினும், தங்கப் பதக்கம் பெறும் மலேசியாவின் இலக்கும் கனவும் இன்னும் நிறைவடையவில்லை. தொடர்ந்து கொண்டிருக்கிறது.

2024-இல் பாரிஸ் ஒலிம்பிக்சில் மலேசியர்களின் கனவு –  எதிர்பார்ப்பு – நிறைவேறுமா என்பதைக் காணக் காத்திருப்போம்!