Home இந்தியா மூடநம்பிக்கை ஒழிப்புக்கு உரிய சட்டத்தை நிறைவேற்ற வேண்டும்: கருணாநிதி வலியுறுத்தல்

மூடநம்பிக்கை ஒழிப்புக்கு உரிய சட்டத்தை நிறைவேற்ற வேண்டும்: கருணாநிதி வலியுறுத்தல்

461
0
SHARE
Ad

சென்னை, செப். 10- மூடநம்பிக்கை ஒழிப்புக்கு உரிய சட்டத்தை மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்ற வேண்டும் என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி வலியுறுத்தி கூறியுள்ளார்.

இதுகுறித்து, தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மராட்டிய மாநில அரசு அண்மையில் மூடநம்பிக்கைகளுக்கு எதிரான அவசரச் சட்டம் ஒன்றைப் பிறப்பித்திருக்கிறது. நரபலி, பில்லி சூனியம், மாந்திரீகம் மற்றும் இதர மனித நேயமற்ற கொடுமையான பழக்கங்களுக்கு எதிராக அந்தச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தச் சட்டத்தின்படி, மோசடிச் செயல்களில் ஈடுபடுவோர் கைதானால், உடனே ஜாமீனில் வெளிவர முடியாது. குற்றம் நிரூபிக்கப்படும்போது, ஏழாண்டு தண்டனை கிடைக்கும். இந்தச் சட்டத்திற்கான மசோதா மராட்டிய மாநிலச் சட்டப்பேரவையில் 3 முறை அறிமுகப்படுத்தப்பட்டு, 29 திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, நிறைவேற்றப்படாமலேயே இதுவரை இருந்து வந்தது.

#TamilSchoolmychoice

karunanidhi -PTIமராட்டிய மாநிலச் சட்டப்பேரவையில் 13 ஆண்டுகளாக முடக்கி வைக்கப்பட்டிருந்த இந்தச் சட்டம், அவசர அவசரமாக 22-8-2013 அன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. அதற்குக் காரணம் மராட்டிய மாநிலத்தில் புகழ்பெற்ற பகுத்தறிவாளரும், மூடநம்பிக்கைகளுக்கு எதிரான தீரம்மிக்க போராளியுமான நரேந்திர தபோல்கர், புனே நகர வீதிகளில் 20-8-2013 அன்று படுகொலை செய்யப்பட்ட மாபாதகச் சம்பவம்தான். அந்தக் கோரச் சம்பவம் நாடெங்கிலுமுள்ள பகுத்தறிவாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

மருத்துவப் பட்டம் பெற்றவரான தபோல்கர், பன்முக ஆற்றல்களின் பெட்டகமாகத் திகழ்ந்தார். மூடநம்பிக்கை எதிர்ப்பு இயக்கத்தின் முன்னணிப் போர்வீரராக இருந்த அவர், சமூகச் சீர்திருத்தங்களில் பேரார்வம் காட்டினார். இந்தியச் சமுதாயத்தில் உள்ள ஏற்றத்தாழ்வுகளுக்கு அடிப்படையாக இருப்பது சாதியம்தான் என்று கருதினார். சாதிய அமைப்பை அறவே ஒழித்திட அரும்பாடுபட்ட நரேந்திர தபோல்கர், பண்பாட்டுப் புரட்சி நடக்காமல் சமத்துவம் சாத்தியமில்லை என்றார்.

‘‘அறியாமையைப் போக்குவதற்கான போராட்டத்தில் எனக்கு எவ்வித ஆயுதமும் தேவையில்லை’’ என்று தபோல்கர் கூறினார். தபோல்கரின் நண்பர் அஜீத் அபயங்கர் என்பவர், ‘‘தபோல்கர், ஆண்டவனுக்கோ, மதத்துக்கோ எதிரானவர் இல்லை; நம்பிக்கையின் பெயரால் சுரண்டல் செய்யப்படுவதற்கு எதிராகவே அவர் போராடி வந்தார்’’ என்று கூறியிருக்கிறார். அபயங்கரின் இந்தக் கருத்தைப் படித்தபோது, ‘‘கோவில் கூடாது என்பதற்காக அல்ல; கோவில் கொடியவர்களின் கூடாரமாக ஆகிவிடக்கூடாதே என்பதற்காக’’ என்ற, நான் எழுதிய ‘‘பராசக்தி’’யின் வசனம் என் நினைவுக்கு வந்தது.

ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் அறிவியல் மனப்பான்மையை வளர்த்துக் கொள்வது அடிப்படைக் கடமை ஆகும் என்று இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 51-ஏ(எச்) உணர்த்துகிறது. தர்க்க நெறிமுறைகளைக் கடைப்பிடிப்பதோடு, வேண்டுதல் வேண்டாமை அகற்றி, ஏற்கனவே மனதில் ஊறிப்போன கருத்துக்களை எதிலும் வலிந்து புகுத்திடாமல் பின்பற்றப்படும் நடைமுறையே அறிவியல் மனப்பான்மை என்பதற்கான விளக்கமாகும். தீவிரமாகக் கலந்தாலோசித்தல், விரிவாக விவாதித்தல் மற்றும் ஆழமாக ஆராய்தல் ஆகியவை அறிவியல் மனப்பான்மையின் முக்கியமான அம்சங்கள் ஆகும்.

பில்லி சூனியம், மாந்திரீகம், ஜோதிடம், ஏவல் என்பவை மூடநம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்டுள்ளதால், அவை ‘அறிவியல் மனப்பான்மை’ என்ற கட்டமைப்புக்கு எதிரானவை; இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு முரணானவை. மூடநம்பிக்கைகளின் அடிப்படையில் தமிழகத்திலும் பல காரியங்கள் நடைபெற்று வருகின்றன. எவ்வளவோ பிரச்சாரத்திற்குப் பிறகும், எத்தனையோ தெளிவுரைகள் வழங்கியதற்குப் பிறகும், அத்தகைய காரியங்கள் நடைபெறுவது – அதிலும் கல்வி கற்றவர்களே அத்தகைய காரியங்களில் ஈடுபடுவது, கொடுமையானதும் வேதனைக்குரியதும் ஆகும். அண்மையிலே நடைபெற்ற 2 நிகழ்வுகள் சமுதாயத்தை மூடநம்பிக்கை எப்படியெல்லாம் ஆட்டி வைக்கிறது என்பதை உணர்த்துகிறது.

நரேந்திர தபோல்கர் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் மூடநம்பிக்கைகளுக்கு எதிரான பிரச்சாரத்தை மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும் என்று உணர்த்தியிருக்கிறது. ‘‘நாம் மீள வேண்டுமானால் – சுயமரியாதை பெற்ற மக்களாக வாழ வேண்டுமென்று நினைத்தால் – அடிமைப்படுத்தும் மூடநம்பிக்கைகளையும், குருட்டுத்தனமான பழக்க வழக்கங்களையும் முதலில் விட்டுவிடவேண்டும்’’ என்று தந்தை பெரியார் அவர்கள் 1923-ம் ஆண்டில் எடுத்துச் சொன்ன அறிவுரை, 90 ஆண்டுகள் கழிந்ததற்குப் பிறகும் இன்னமும் நமது சமூகத்தில் முழுமையாகப் பின்பற்றப்படவில்லை என்பதை நாட்டில் நடைபெறும் நிகழ்வுகள் புலப்படுத்துகின்றன. பகுத்தறிவு – அறிவியல் மனப்பான்மை குறித்த பிரச்சாரம் இன்னும் தீவிரமாகவும் இடைவெளி இல்லாமலும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதும்; இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் சுட்டிக் காட்டியுள்ளபடி, சட்டநெறிமுறைகள் வகுக்கப்பட்டு, முறையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதும் அவசியமாகிறது. மூடநம்பிக்கை ஒழிப்புக்கு உரிய சட்டம் ஒன்றை மத்திய அரசும், மாநில அரசும் கொண்டுவந்து நிறைவேற்ற வேண்டும்; அறிவியல் மனப்பான்மை பற்றிய பாடத்திட்டம் பள்ளி – கல்லூரிப் படிப்பில் இணைக்கப்பட வேண்டும்; என்பது அவசரத் தேவையாகவும், கால ஓட்டத்தின் கட்டாயமாகவும் ஆகிவிட்டதால்; அந்தக் கோரிக்கையை அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து முனைப்போடு முன்னெடுத்துச் செல்வோம். அதுவே நரேந்திர தபோல்கர் நினைவுக்கு நாம் செலுத்திடும் வீரவணக்கமாகும்.

இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.