செப்டம்பர் 11 – ஐவொர்க் (iWork productivity suite) எனப்படும் செயலியும், ஐலைஃப்(iLife) செயலிகளான ஐமூவி(iMovie), ஐபோட்டோ(iPhoto) போன்ற செயலிகளும் புதிதாக நேற்று அறிமுகப்படுத்தப்பட்ட iOS 7 கருவிகளுடன் இலவசமாக இணைக்கப்பட்டு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், அதன் மூலம் ஐபோன்களின் விற்பனை மேலும் பன்மடங்காக உயரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
காரணம், இந்த செயலிகள் ஏற்கனவே பயனீட்டாளர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றிருந்தன என்பது குறிப்பிடத்தக்கதாகும். இந்த செயலிகள் மூலம் புகைப்படங்களையும் காணொளிகளையும் (வீடியோக்கள்) தொகுக்க (edit) முடியும்.
புதிதாக வாங்கப்படும் ஐபோன் செல்பேசிகள், ஐபேட் எனப்படும் தட்டைக் கருவிகள் மற்றும் ஐந்தாம் தலைமுறை பதிப்பான ஐபோட் (iPod touch) ஆகிய கருவிகளில் இந்த செயலிகளை இலவச இணைப்புக்களாகப் பெறலாம்.
ஆப்பிள் நிறுவனத்தின் தலைமைச் செயல்முறை அதிகாரி டிம் குக் இதுபற்றி கருத்துரைக்கையில் “வேறு எந்த இயங்குதளத்திலும் இதுபோன்ற செயலிகள் இல்லை. இந்த செயலிகளின் இணைப்போடு புதிய ஐஓஎஸ் கருவிகள் மேலும் சிறப்பாக தயாரிக்கப்பட்டுள்ளன. ஏறத்தாழ எங்களின் எல்லா பயனீட்டாளர்களும் இந்த செயலிகளை விரும்புவதால் மேற்கூறப்பட்ட ஐந்து செயலிகளையும் இலவசமாக வழங்குகின்றோம்” என்று கூறியுள்ளார்.
இதன்மூலம், மேலும் அதிகமானோர் ஐபோன்களை வாங்க முன்வருவார்கள் என்பதால், செயலிகளின் விற்பனை மூலம் பெறக்கூடிய வருமானத்தை விட கூடுதலான வருமானத்தை ஐபோன்களின் விற்பனையின் மூலம் பெற முடியும் என்பதுதான் ஆப்பிள் நிறுவனத்தின் வியூகமாக இருக்கின்றது.
ஐபோன் 5க்கு மாற்றாக ஐபோன் 5S என்றும், ஐபோன் 5C என்ற மலிவு விலை ஐபோன்களையும் நேற்று ஆப்பிள் நிறுவனம் அமெரிக்காவில் அறிமுகப்படுத்தியுள்ளது.