கோலாலம்பூர், செப். 18- சுருட்டை முடி அனைவருக்கும் கிடைத்து விடாது.
ஒரு சிலருக்குதான் இயற்கையிலேயே கருமையான சுருட்டை, சுருட்டையாக கூந்தல் அமையும்.
இது கூந்தலின் அடர்த்தியையும், பெண்களின் அழகை அதிகரித்துக் காட்டும்.
அடர்த்தியாகவும், அதேசமயம் கரு கருவென அமைந்த சுருட்டை முடியை பராமரிக்க அழகியல் நிபுணர்கள் கூறியுள்ள சில ஆலோசனைகளை பின்பற்றலாம்.
அடிக்கடி தலை குளிக்காதீங்க
தினசரி தலைக்கு குளிப்பது நல்லது என்று நீங்கள் நினைக்கலாம்.
அது தவறானது. இயற்கையிலே தலையில் உள்ள எண்ணெய் தன்மை இழப்பிற்கு அது காரணமாகிறது.
இதனால் தலைமுடி வறண்டு ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது.
குறிப்பாக சுருட்டை முடிக்கு அதிக எண்ணெய் தன்மை தேவை.
அதிலும் தினசரி தலைக்கு குளிப்பதன் மூலம் கூந்தல் சிக்கல் ஏற்படும் அதிகமாகும்.
எனவே தினசரி தலைக்கு தண்ணீர் ஊற்றவேண்டாம் என்பது நிபுணர்களின் அறிவுரையாகும்.
ஷாம்பு, கண்டிசனர்
சுருட்டை முடி உள்ளவர்கள் சரியான ஷாம்பு, கண்டிசனரை பயன்படுத்துவது அவசியம்.
இயல்பான நேரான கூந்தல் உள்ளவர்களுக்கு பயன்படுத்தும் ஷாம்பு, கண்டீசனரையே பயன்படுத்து சரியாக இருக்காது என்பது அழகியல் நிபுணர்களின் அறிவுரை.
கூந்தல் சிகிச்சை
சுருட்டை கூந்தல் உடைந்து உதிர்வதை தடுக்க வாரம் ஒருமுறை அதற்கு தனியான சிகிச்சை அளிப்பது அவசியம்.
ஒரு கிண்ணத்தில் வெண்ணெய் எடுத்துக்கொண்டு கூந்தலை நன்றாக விரித்து விட்டுக் கொள்ளவும்.
வெண்ணையை விரலில் எடுத்து கூந்தலின் வேர்கள் வரை படுமாறு தேய்த்து ஊறவைக்கவும்.
அரைமணிநேரம் ஊறியபின் குளிக்க கூந்தல் உடைந்து உதிர்வது குறையும்.
சீப்பில் கவனம்
சுருட்டை கூந்தல் உடையவர்கள் பெரிய பற்களை உடைய சீப்பில்தான் சீவவேண்டும்.
அப்பொழுதுதான் எளிதாக சிக்கல் எடுக்க முடியும். கூந்தலும் வலி இல்லாமல் சீவ முடியும்.
எனவே உங்களுக்கு என்று தனியாக சீப்பு வைத்துக் கொள்ளுங்கள்.
சுருட்டை கூந்தல் உள்ளவர்களுக்கு அதிகம் அழுக்கும், பேன் தொல்லையும் ஏற்படும் எனவே கவனமாக கையாளுங்கள்.
தலைமுடி கவனம்
தலைக்கு குளித்து விட்டு அதிகநேரம் தலையில் துண்டி கட்டியிருக்க வேண்டாம்.
ஏற்கனவே சுருட்டை முடி உள்ள நிலையில் அதிகநேரம் தலையில் துண்டு கட்டியிருப்பது ஈரப்பதம் உறிஞ்சப் படுவதோடு கூந்தல் அதிகம் வறண்டு உதிர வாய்ப்புள்ளது.
கூந்தலை நேசியுங்கள்
யாருக்குமே கிடைக்காத வரம் உங்களுக்கு கிடைத்துள்ளது.
சுருட்டை கூந்தல் உள்ளவர்கள் நமக்கு ஏன் இப்படி என்று வருந்த வேண்டாம்.
உங்கள் கூந்தல் அனைவரையும் கவரும். எனவே உங்கள் கூந்தலை நேசியுங்கள்.