Home One Line P2 ஏர் ஆசியாவின் “மருத்துவ சுற்றுலா” விரிவடைகின்றது

ஏர் ஆசியாவின் “மருத்துவ சுற்றுலா” விரிவடைகின்றது

847
0
SHARE
Ad

ஜோர்ஜ்டவுன் : நாட்டின் முன்னணி மலிவு விலை விமானப்பயண நிறுவனமான ஏர் ஆசியா மருத்துவ சுற்றுலா துறையில் தனது கவனத்தைத் தீவிரமாகச்  செலுத்தத் தொடங்கியிருக்கிறது.

இந்தோனிசியாவிலிருந்து மருத்துவ சேவைகளைத் தேடி வரும் நோயாளிகளுக்கு தடையில்லா சுற்றுப் பயண அனுபவங்கள் கிடைக்க ஏர் ஆசியா அரசாங்க இலாகாக்களுடனும், மருத்துவ மையங்களுடனும் அணுக்கமாக செயலாற்றி வருகிறது என ஏர் ஆசியா தலைமைச் செயல் அதிகாரி கேரன் சான் தெரிவித்தார்.

நோயாளிகள் சிகிச்சை பெறும் நோக்கில் தனிவிமானமாக வாடகைக்கு எடுத்து வருவதற்கு ஏர் ஆசியா அதற்கான சேவைகளை வழங்கும்.

#TamilSchoolmychoice

“இதுபோன்ற சவாலான காலகட்டத்தில், பயணங்களுக்கான கட்டுப்பாடுகள் நிலவும் நேரத்தில், மக்களுக்கான தேவைகளைப் பூர்த்தி செய்வதில் அவர்களுக்கான தொடர்புப் பாலமாக இயங்குவதில் ஏர் ஆசியா பாடுபடுகிறது. சில நோயாளிகள் கடுமையான நோய்களால் பாதிக்கப்பட்டிருப்பதால் அவர்களுக்கு சிறப்பான, நிபுணத்துவ மருத்துவ சிகிச்சை தேவைப்படுகிறது” எனவும் கேரன் சான் கூறினார்.

நேற்று வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 14) இந்தோனிசியாவின் மேடான் நகரிலிருந்து மருத்துவ சிகிச்சைக்காக நோயாளிகளை ஏற்றிக் கொண்டு வந்த முதல் தனி வாடகை விமானம் பினாங்கு அனைத்துலக விமான நிலையத்தை வந்தடைந்தது.

அந்த விமானப் பயணிகளையும், பணியாளர்களையும் வரவேற்கும் நிகழ்ச்சியில் பேசியபோதே கேரன் சான் இந்த விவரங்களை வெளியிட்டார்.

இதுபோன்ற பல சேவைகளை தனது வணிகப் பங்காளித்துவ மருத்துவமனை மையங்களுடன் இணைந்து வழங்க தாங்கள் தொடர்ந்து பாடுபடப் போவதாகவும் கேரன் சான் தெரிவித்தார்.

அதிகமான மருத்துவ சுற்றுலாப் பயணிகள் மலேசியாவுக்கு வருவது இந்தோனிசியாவிலிருந்துதான் என்பதால், மற்ற இந்தோனிசிய நகர்களுக்கும் சுற்றுலா மருத்துவ சேவைகளை விரிவாக்க ஏர் ஆசியா ஏற்பாடு செய்து வருகிறது.

அடுத்த மருத்துவ நோயாளிகளுக்கான தனி விமானம் எதிர்வரும் ஆகஸ்ட் 24-ஆம் தேதி ஜாகர்த்தாவிலிருந்து வரும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

கடன் பிரச்சனைகளைச் சமாளிக்க 1 பில்லியன் ரிங்கிட் கடன் பெறும் ஏர் ஆசியா

இதற்கிடையில் கொவிட்-19 பாதிப்புகளால் கடும் நிதிப் பற்றாக்குறையையும், வணிக ரீதியான சவால்களையும் எதிர்நோக்கியிருக்கும் ஏர் ஆசியா நிறுவனத்திற்கு 1 பில்லியன் ரிங்கிட் வரை கடன்களை வழங்க வங்கிகள் முன்வந்திருக்கின்றன என அண்மையில் தகவல் வெளிவந்தன.

கோலாலம்பூர் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனமான ஏர் ஆசியா, நிதிச் சிக்கலினால் பிஎன் 17 என்ற நடைமுறை வரையறைக்குள் சிக்கியிருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியிடப்பட்டன.

இந்நிலையில் போதுமான ரொக்கக் கையிருப்பைக் கொண்டிருக்கவும், தடையின்றி விமானச் சேவைகளைத் தொடரவும் சில வங்கிகள் 1 பில்லியன் ரிங்கிட் வரை கடன் வழங்கி ஆதரவுக் கரம் நீட்ட முன்வந்திருக்கின்றன என  ஏர் ஆசியாவின் தலைவர் டோனி பெர்னாண்டஸ் தெரிவித்திருந்தார். இந்தக் கடன்களில் ஒரு பகுதிக்கு மலேசிய அரசாங்கம் தனது பொருளாதார ஊக்குவிப்புத் திட்டத்தின் கீழ் உத்தரவாதம் வழங்கும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

மலேசியா தவிர்த்து பிலிப்பைன்ஸ், இந்தோனிசியா ஆகிய நாடுகளில் இயங்கும் ஏர் ஆசியா நிறுவனங்களும் அந்தந்த நாடுகளின் பொருளாதார ஊக்குவிப்புத் திட்டங்களில் பங்கு பெறும் என்றும் இதற்கு நல்ல ஆதரவு கிடைத்திருப்பதாகவும் டோனி பெர்னாண்டஸ் மேலும் தெரிவித்திருந்தார்.

கடந்த சில மாதங்களாக விமானச் சேவைகள் முடக்கப்பட்டிருந்த காலகட்டத்தின் தங்களின் ஏர் ஆசியா நிறுவனம் பல்வேறு மீட்பு நடவடிக்கைகளைத் திட்டமிட்டதாகவும் அதன் வழி தங்களின் ரொக்கச் செலவினங்களில் 50 விழுக்காடு வரை குறைக்க முடியும் என எதிர்பார்ப்பதாகவும் கூறியிருந்தது.

தற்காலிகமாக ஊழியர்களின்  சம்பள விகிதங்களை 15 முதல் 75 விழுக்காடு வரை குறைத்துக் கொள்வதற்கும் தாங்கள் இணக்கம் கண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஒரே நாளில் 75 ஆயிரம் இருக்கைகள் விற்பனை

கடந்த ஜூலை 7-ஆம் தேதி ஒரே நாளில் 75 ஆயிரம் விமான சேவை இருக்கைகளை விற்பனை செய்து ஏர் ஆசியா சாதனை படைத்திருக்கிறது. முடக்கப்பட்டிருந்த காலகட்டத்தில் ஒரே நாளில் ஏர் ஆசியா மேற்கொண்ட மிக அதிகமான விற்பனை எண்ணிக்கை இதுவாகும். மலேசியா, தாய்லாந்துக்கென வரையறையற்ற முன் அனுமதிச் சீட்டுகள் 200,000-க்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் ஏர் ஆசியா விற்பனை செய்தது.

இதற்கிடையில், கோலாலம்பூர் பங்குச்சந்தை பின்பற்றும் பிஎன் 17 என்ற (Practice Note 17 – PN17) நடைமுறை உத்தரவு வரையறைக்குள் ஏர் ஆசியா இடம் பெற்றிருக்கிறது என அதன் நிர்வாகம் கடந்த ஜூலை 8-ஆம் தேதி அறிவித்தது.

கொவிட்-19 பாதிப்புகளால் அனைத்து விமான நிறுவனங்களும் மோசமாகப் பாதிக்கப்பட்டு தற்போது மெல்ல மெல்ல மீண்டு வருகின்றன.

இந்நிலையில்தான் பிஎன் 17 நடைமுறை உத்தரவு நிலைமைக்கு உட்படுத்தப்படிருப்பதாக ஏர் ஆசியா அறிவித்திருந்தது.

அரசாங்கமும், கோலாலம்பூர் பங்குச் சந்தையும் நிறுவனங்களுக்கு அறிவித்திருக்கும் சலுகைகள், மீட்சி, நிவாரண நடவடிக்கைகள் காரணமாக அதிகாரபூர்வமாக அந்த நிலைமைக்கு வர தங்களுக்கு இன்னும் காலதாமதம் ஆகலாம் என்றும் ஏர் ஆசியா அறிவித்தது.

தங்களின் வெளிக் கணக்காய்வாளர்கள் எர்னஸ் அண்ட் யங் (Messrs Ernst & Young PLT) 31 டிசம்பர் 2019 வரையிலான நிதியாண்டுக்கென வழங்கியிருக்கும் கணக்குத் தணிக்கையறிக்கை மீதான ஆலோசனை காரணமாகவே தாங்கள் பிஎன்17 வரையறைக்குள் உட்படுத்தப்பட்டிருப்பதாக ஏர் ஆசியா தெரிவித்தது.

அடுத்த 12 மாதங்களுக்குள் நிலைமையைச் சரிசெய்ய, அரசாங்க, கோலாலம்பூர் பங்குச் சந்தை நடைமுறைப்படி தங்களுக்கு கால அவகாசம் இருப்பதாகவும் ஏர் ஆசியா தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.