Home One Line P1 ஜோகூர் அரசாங்கம் கவிழுமா?  சமாதான முயற்சியில் மொகிதின்!

ஜோகூர் அரசாங்கம் கவிழுமா?  சமாதான முயற்சியில் மொகிதின்!

617
0
SHARE
Ad

ஜோகூர் பாரு – பிரதமர் டான்ஶ்ரீ மொகிதின் யாசின் நேற்று சனிக்கிழமை தொடங்கி இரண்டு நாள் வருகை மேற்கொண்டு ஜோகூர் மாநிலம் வந்தடைந்திருக்கிறார்.

அந்த வருகையின்போது ஜோகூர் மாநில அரசாங்கத்தின் அரசு ஊழியர்களோடு சந்திப்பு ஒன்றை நடத்தினார் பிரதமர். ஜோகூர் சுல்தானையும் சந்தித்தார்.

எனினும் இது பிரதமர் ஒருவரின் வழக்கமான மாநில வருகை அல்ல!

#TamilSchoolmychoice

மாநிலத்தில் நூலிழையில் ஊசலாடிக்கொண்டிருக்கும் ஜோகூர் மாநில அரசாங்கம் எந்நேரத்திலும் கவிழக் கூடும் என்ற ஆரூடங்கள் எழுந்திருக்கின்றன.

இன்னொரு புறத்தில் பெரிக்காத்தான் நேஷனல் என்ற தேசியக் கூட்டணியில் இடம் பெற்றிருக்கும் கட்சிகளுக்கு இடையிலான புகைச்சலும், மோதல்களும் உச்சகட்டத்தில் இருப்பது ஜோகூர் மாநிலத்தில்தான்!

துன் மகாதீர் புதிதாக பெஜூவாங் என்ற என்ற கட்சியைத் தொடங்கி இருப்பதைத் தொடர்ந்து நாடு தழுவிய அளவில் பெர்சாத்து பிளவு பட்டு வருகிறது.

எதிர்வரும் ஆகஸ்ட் 29-ஆம் தேதி நடைபெறவிருக்கும் சிலிம் சட்டமன்ற இடைத் தேர்தலிலும் மகாதீரின் கட்சி தனது வேட்பாளரைக் களமிறக்குகிறது.

ஜோகூர் மாநிலத்தில் உள்ள சில பெர்சாத்து தொகுதிகளும், சட்டமன்ற உறுப்பினர்களும் மகாதீரின் கட்சியில் இணையலாம் என்ற பரபரப்பு நிலவுகிறது.

கடந்த வாரம் கோத்தா திங்கி பெர்சாத்து தொகுதியின் எட்டு கிளைகளோடு அந்தத் தொகுதி மகாதீரின் கட்சியில் இணைவதாக அறிவிப்பு வெளியாகியது.

ஶ்ரீ காடிங் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினர் ஷாஹாருடின் சாலே ஜோகூர் மாநிலத்தின் 70 விழுக்காடு உறுப்பினர்கள் பெர்சாத்துவிலிருந்து விலகி மகாதீர் பெஜூவாங் கட்சியில் இணைவார்கள் என கணித்திருக்கிறார். துணையமைச்சராக இருந்த ஷாஹாருடின் சாலே மொகிதின் அணியிலிருந்து விலகி, துணையமைச்சர் பதவியையும் துறந்து மகாதீரோடு இணைந்தவராவார்.

இதற்கிடையில் அம்னோ-பாஸ் இணைந்துள்ள முவாபாக்காட் நேஷனல் கூட்டணியில் புதிதாக இணையப் போவதாகவும் மொகிதின் யாசின் அறிவித்திருக்கிறார்.

இதன் காரணமாகவும், அதிருப்தி அலைகள் கட்சியில் எழுந்திருக்கிறது.

பெர்சாத்து தனது தனித்தன்மையை இழக்கிறது – கட்சியை மொகிதின் அம்னோவிடம் அடமானம் வைத்து விட்டார் – தனது இலக்குகளில் இருந்து பெர்சாத்து விலகி விட்டது –  என்றெல்லாம் எதிர்ப்புக் குரல்களின் ஓசை வலுத்துக் கொண்டே வருகிறது.

இந்த சிக்கலான சூழ்நிலையை சமாளிக்கவும், எழுந்திருக்கும் அரசியல் வெப்பத்தைத் தணிக்கவும்தான் மொகிதின் ஜோகூர் மாநிலத்திற்கு வந்திருக்கிறார்.

நேற்று சனிக்கிழமை (ஆகஸ்ட் 15) தேசியக் கூட்டணியின் முக்கியத் தலைவர்களை இரவு விருந்தில் சந்தித்தார் மொகிதின்.

அம்னோ, மசீச, மஇகா, பாஸ், பெர்சாத்து கட்சிகளின் பிரதிநிதிகள் இந்த விருந்தில் கலந்து கொண்டனர். அழைப்பு விடுக்கப்பட்டவர்கள் மட்டுமே கலந்து கொள்ளும் வண்ணம் இரகசியமாக – மூடிய கதவுகளுக்குப் பின்னால் நேற்றைய மொகிதினின் சந்திப்புக் கூட்டம் நடைபெற்றிருக்கிறது.

அடுத்த சில நாட்களில் ஜோகூர் மாநிலத்தில் பெர்சாத்து கட்சியில் அரங்கேறக் கூடிய சம்பவங்களை வைத்து,

மொகிதின் யாசினின் ஜோகூர் வருகை வெற்றி பெற்றதா?

பெர்சாத்து கட்சியில் எழுந்த குமுறல்களை, எதிர்ப்புக் குரல்களை அவர் வெற்றிகரமாக அடக்கித் தணித்து விட்டாரா? என்பது தெரிய வரும்.

-இரா.முத்தரசன்