Home One Line P2 மொரிஷியஸ் : எண்ணெய் சிந்திய கப்பல் இரண்டாகப் பிளந்தது

மொரிஷியஸ் : எண்ணெய் சிந்திய கப்பல் இரண்டாகப் பிளந்தது

791
0
SHARE
Ad

மொரிஷியஸ் : ஆப்பிரிக்காக் கண்டத்தின் அருகில் இந்து மாக்கடலில் அமைந்திருக்கும் அழகிய தீவு நாடு மொரிஷியஸ். இந்தியா, நேப்பாளத்தை அடுத்த பெரும்பான்மை மக்கள் தொகையினரை இந்துக்களாகக் கொண்ட நாடு.

இயற்கை வளம் மிக்க வனப் பகுதிகளையும், அழகிய, தூய்மையான கடற்கரைகளையும் கொண்ட நாடு. ஜூலை மாத இறுதியில் மொரிஷியஸ்  கடல் பகுதியில் தரைதட்டிய ஜப்பானியக் கப்பல் “எம்வி வாகாஷியோ” அதன் பின்னர் ஏராளமான எண்ணெயை கடலில் சிந்தத் தொடங்கியது.

இதன்காரணமாக பாதுகாப்பு அச்சுறுத்தல்களை எதிர்நோக்கிய மொரிஷியஸ் சுற்றுச் சூழல் அவசரகாலத்தையும் அறிவித்தது.

#TamilSchoolmychoice

நேற்று சனிக்கிழமை 4.30 மணியளவில் அந்தக் கப்பல் முன்பகுதி உடைந்து, இரண்டாகப் பிளந்தது என மொரிஷியஸ் அரசாங்கம் அறிவித்திருக்கிறது.

எண்ணெய் சிந்தியதால், அந்நாட்டின் கடல் பகுதி மோசமாகப் பாதிக்கப்பட்டது. நூற்றுக்கணக்கான தன்னார்வத் தொண்டர்கள், இயற்கை ஆர்வலர்கள் உடனடியாக எண்ணைய் கசிவால் ஏற்பட்ட சீரழிவுகளை சரிசெய்ய உடனடியாக நடவடிக்கையில் இறங்கி தூய்மைப் படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கண்ணாடி போன்ற தெளிவான கடல் நீரைக் கொண்டிருப்பதற்காக மொரிஷியஸ் உலகப் புகழ் பெற்றது. ஆண்டுதோறும் மில்லியன் கணக்கான சுற்றுப் பயணிகள் இந்த நாட்டிற்கு வருகை தருகின்றனர்.

மிட்சுய் ஓ.எஸ்.கே லைன்ஸ் என்ற ஜப்பானிய நிறுவனத்திற்கு சொந்தமானது இந்த வாகாஷியோ என்ற கப்பல்.

கப்பல் இரண்டாகப் பிளந்ததால் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த தன்னார்வத் தொண்டர்கள் அந்த இடத்தை விட்டு அகன்று விடுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறார்கள்.

மிட்சுய் நிறுவனம் இதுவரையில் அந்தக் கப்பல் தனது எண்ணெய் கிடங்கிலிருந்து 1,180 மெட்ரிக் டன் எண்ணெயை இதுவரையில் கடலில் வெளியேற்றியிருக்கிறது. 3,800 டன் எண்ணெய் மற்றும் 200 டன் டீசல் ஆகியவற்றைத் தனது பயன்பாட்டுக்காகக் கொண்டிருந்தது.

இதுவரையில் சுமார் 460 டன் எண்ணெயை மட்டுமே மீட்புக் குழுவினர் மீட்டிருக்கின்றனர்.

சீனாவிலிருந்து பிரேசில் நோக்கிச் சென்று கொண்டிருந்த அந்தக் கப்பல் கடந்த ஜூலை 25-ஆம் தேதி மொரிஷியஸ் கடல் பகுதியில் தரைதட்டியது. அதைத் தொடர்ந்து அந்தக் கப்பலில் இருந்து வெளியேறிய எண்ணெயால் இயற்கைச் சீரழிவை மொரிஷியஸ் சந்தித்துக் கொண்டிருக்கிறது.

கப்பல் தரைதட்டிய இடத்துக்கருகில் கடல்வள பூங்காக்களும், சுற்றுச் சூழல் பாதுகாப்பைக் கொண்ட பிரதேசங்களும் அமைந்திருக்கின்றன. சுற்றுப் பயணிகள் குவியும் பிரபலமான கடற்கரைகளும் அமைந்திருக்கின்றன.