வாஷிங்டன் : நூற்றாண்டு பழமை வாய்ந்த டைட்டானிக் கப்பலின் எஞ்சிய, சிதைந்த பாகங்களைக் காண்பதற்காக பயணம் சென்ற நீர்மூழ்கிக் கப்பலில் இருந்த 5 பேரும் மரணமடைந்ததாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
அந்த நீர்மூழ்கிக் கப்பல் வெடித்துச் சிதறியதால் அந்தக் கலத்திலிருந்த ஐவரும் மரணமடைந்தனர் என்றும் அமெரிக்கக் கடலோரக் காவல் படை அறிக்கை ஒன்றின் வழி அறிவித்துள்ளது. வெடித்துச் சிதறிய நீர்மூழ்கிக் கப்பலின் சிதைந்த பாகங்கள் கடலில் மிதப்பது கண்டுபிடிக்கப்பட்டதாகவும் அந்த அறிக்கை தெரிவித்தது
கடலுக்குள் முக்குளிக்கும் இயந்திரம் கனடாவின் கப்பல் ஒன்றில் இருந்து இயக்கப்பட்டு அதன் மூலம் நீர்மூழ்கிக் கப்பலின் உடைந்த பாகங்கள் அடையாளம் காணப்பட்டன. வட அட்லாண்டிக் கடலடியில் டைட்டான் எனப் பெயர் கொண்ட அந்த நீர்மூழ்கிக் கப்பல் விபத்துக்குள்ளாகி தரையிலிருந்து சுமார் 4 கிலோமீட்டர் ஆழத்தில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. நூறாண்டுகளுக்கு முன்னர் கடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பல் தரைதட்டியிருக்கும் இடத்தில் இருந்து சுமார் 1,600 அடி தூரத்தில் டைட்டான் நீர் மூழ்கிக் கப்பலின் சிதறிய பாகங்கள் கிடக்கின்றன என்றும் அமெரிக்கக் கடலோரக் காவல்படை தெரிவித்தது.
டைட்டான் நீர்மூழ்கிக் கப்பல் 22 அடி நீளம் கொண்டதாகும்.