Home One Line P2 அலிபாபா : தடைசெய்ய அமெரிக்க அரசாங்கம் குறிவைக்கும் அடுத்த நிறுவனம்!

அலிபாபா : தடைசெய்ய அமெரிக்க அரசாங்கம் குறிவைக்கும் அடுத்த நிறுவனம்!

776
0
SHARE
Ad

வாஷிங்டன் : சீனாவைச் சேர்ந்த தொழில்நுட்ப நிறுவனங்கள் குறுஞ்செயலிகள் ஆகியவற்றைத் தொடர்ந்து குறிவைத்து தடைசெய்யும் நடவடிக்கைகளை அமெரிக்க அரசாங்கம் எடுத்து வருகிறது

அந்த வரிசையில் டிக் டாக், வீ சாட் ஆகிய குறுஞ்செயலிகளைத் தொடர்ந்து அமெரிக்கா குறி வைத்திருக்கும் அடுத்த தொழில்நுட்ப நிறுவனம் அலிபாபா என அமெரிக்க ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்கா குறிப்பிட்ட சில நிறுவனங்களை மட்டும்  குறி வைக்காமல் தனது வலையை மிக விரிவாக விரித்து பல சீன நிறுவனங்களை முடக்குவதற்கு வியூகம் வகுத்து இருக்கிறது என்றும் கூறப்படுகிறது.

#TamilSchoolmychoice

சீனாவின் முன்னணி இணைய வணிக நிறுவனமான அலிபாபா நிறுவனம் குறித்து டொனால்ட் டிரம்ப் இதுவரை பகிரங்கமாக அறிவிப்பு எதனையும் எடுக்கவில்லை.  ஒரு முறை அலிபாபாவின் தோற்றுனர் ஜேக் மா (படம்) எனது நண்பர் என்று கூட டிரம்ப் கூறியிருந்தார்.

கொவிட் – 19 பிரச்சனை காரணமாக அமெரிக்கா பாதிப்புக்குள்ளாகி இருந்த காலகட்டத்தில்  மில்லியன் கணக்கான உதவி பொருட்களை அமெரிக்காவிற்கு வழங்கினார் ஜேக் மா.

எனினும் அண்மையில் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ அண்மையில் விடுத்த அறிக்கையொன்றில் தடை செய்யப்படக் கூடிய சீன நிறுவனங்களின் பட்டியலில் அலிபாபா நிறுவனத்தின் பெயரையும் குறிப்பிட்டிருந்தார்.

அமெரிக்க நிறுவனங்கள் தங்களின் முக்கிய ஆராய்ச்சித் தரவுகள், தகவல்கள் அவர்களுக்கே தெரியாமல் மூன்றாம் தரப்புக்கு பரிமாற்றம் செய்யப்படாமலிருக்க சீனாவின் தொழில்நுட்ப அம்சங்களை தங்களின் மின்னிலக்க (டிஜிட்டல்) தளங்களிலிருந்து அகற்ற வேண்டும் என பாம்பியோ கேட்டுக் கொண்டிருந்தார்.

அமெரிக்க அரசாங்கத்தின் நம்பிக்கையைப் பெறாத நிறுவனங்களின் பெயர்களை குறிப்பிடும் பொழுது அலிபாபா நிறுவனத்தின் பெயரையும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

அப்படியே அலிபாபா நிறுவனத்தின் மீது அமெரிக்கா அரசாங்கம் பொருளாதாரத் தடைகள் விதித்தாலும் அதனால் அந்நிறுவனத்திற்கு பெரிதாக பாதிப்பு ஏற்பட வாய்ப்பில்லை என்றே கருதப்படுகிறது.

ஆண்டுக்கு சுமார் 73.5 பில்லியன் டாலர் வணிக வருமானத்தைக் கொண்ட அலிபாபாவின் 80 விழுக்காடு சில்லறை வணிகங்களும், இணையத் தள வணிகங்களும் சீனாவில் இருந்து பெறப்படுகின்றன.

உதாரணத்திற்கு ஆப்பிள் கடந்த ஆண்டு சீனா உள்ளிட்ட வட்டாரத்தில் 44 பில்லியன் மதிப்புடைய தனது தயாரிப்புகளையும், சேவைகளையும் விற்பனை செய்தது. சீனாவின் வட்டாரம் என்பது ஹாங்காங், தைவான் ஆகிய நாடுகளையும் உள்ளடக்கிய வட்டாரமாகும்.

ஆப்பிளின் மொத்த விற்பனையில் இந்தத் தொகை 17 விழுக்காடாகும்.

அனைத்துலக மற்றும் மொத்த விற்பனை மூலம் அலிபாபாவுக்குக் கிடைக்கும் வருமானத்தின் அளவு மொத்த வருமானத்தில் 7 விழுக்காடு மட்டுமே ஆகும். எனவே, அமெரிக்கத் தடையால் அலிபாபாவுக்கு அதிகமான பாதிப்புகள் ஏற்படாது என்றே கருதப்படுகிறது.

அலிபாபாவின் மொத்த வருமானத்தில் கிளவுட் எனப்படும் இணையவெளி பயன்பாடு தொடர்பான வணிகத்தின் மூலமான வருமானம் சுமார் 10 விழுக்காடு மட்டுமே ஆகும்.

அலிபாபா பெரிய அளவில் அமெரிக்காவில் வணிகத்தை கொண்டிருக்காவிட்டாலும் பல அமெரிக்க நிறுவனங்கள் தங்களின் பொருட்களை அலிபாபாவின் இணையதளத்தின் வழி விற்பனை செய்து வருகின்றன. ஆப்பிள், விளையாட்டு தளவாடப் பொருட்கள் தயாரிக்கும் நைக்கி, ஜான்சன் அண்ட் ஜான்சன் போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் தங்களின் பொருட்களை அலிபாபாவின் தளங்கள் வழியே விற்பனை செய்து வருகின்றன.

அலிபாபாவுக்கும் அமெரிக்காவுக்கும் உள்ள தொடர்பு வெறும் பணத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டதல்ல.

2014 ஆம் ஆண்டில் தனது அலிபாபா நிறுவனத்தை பங்குச்சந்தையில் பட்டியலிட முன்வந்தபோது ஜேக் மா தேர்ந்தெடுத்த களம் நியூயார்க் பங்குச் சந்தையாகும்.

நியூயார்க் பங்குச்சந்தையில் தனது பங்குகளை விற்பனை செய்ய அலிபாபா முன்வந்தபோது அதன்மூலம் 25 பில்லியன் அமெரிக்க டாலரை அது முதலீடாக திரட்டியது.

உலக வரலாற்றில் மிக பெரிய பங்கு விநியோக விற்பனை இதுவாகும். அந்த சாதனையை கடந்த ஆண்டு சவுதி அரேபியாவின் சவுதி அராம்கோ நிறுவனம்தான் முறியடித்தது.

சவுதி அராம்கோவின் பொதுப் பங்கு வினியோகம் மூலம் 25.6 பில்லியன் அமெரிக்க டாலர்கள் முதலீட்டை அந்நிறுவனம் திரட்டியது.