Home நாடு இந்தியத் தூதரக அதிகாரி சிவன்: நீண்டதூர ஓட்டங்களுக்கு வயது தடையில்லை என நிரூபித்தவர்!

இந்தியத் தூதரக அதிகாரி சிவன்: நீண்டதூர ஓட்டங்களுக்கு வயது தடையில்லை என நிரூபித்தவர்!

236
0
SHARE
Ad

60 வயதைத் தொட்டுவிட்ட நிலையிலும் இளைஞர்களுக்கு சவால் விடும் வகையில் மராத்தோன் என்னும் நீண்ட தூர ஓட்டப் போட்டிகளில் சாதனை படைத்து வருகிறார் திரு சிவன். கோலாலம்பூரிலுள்ள இந்தியத் தூதரகத்தின் முதன்மை அதிகாரிகளில் ஒருவராகப் பணியாற்றி (Second Secretary and the Head of the Chancery) கடந்த ஜூன் 30-ஆம் தேதிதான் வயதுக் கட்டுப்பாடு காரணமாக 60-வது வயதில் ஓய்வு பெற்றவர்.

அவரின் வயதில் பலரும் பல உடல் உபாதைகளையும் வயதையும் காரணம் காட்டி நடைப் பயிற்சி போவதைக் கூட தவிர்ப்பார்கள். ஆனால் சிவனோ வேறு மாதிரி!

வயதுக்கும் உடலை சீராகவும் கட்டுக்கோப்பாகவும் வைத்திருப்பதற்கும்  சம்பந்தமில்லை என்பதை நிரூபித்து வருகிறார் சிவன்.

Sivan
#TamilSchoolmychoice

மார்ச் 2023 – ஜூன் 24 வரையிலான இடைப்பட்ட காலத்தில் 25 பாதி மராத்தோன் ஓட்டங்களை வெற்றிகரமாக நிறைவு செய்து சாதனை படைத்திருக்கிறார். ஒரு மராத்தோன் ஓட்டம் என்பது 42.195 கிலோமீட்டர் தூரமாகும். பாதி மராத்தோன் என்பது அந்த தூரத்தில் பாதியாகும்.

60 வயதைக் கடந்து விட்டார் என்பதால் கடந்த ஜூன் 30-ஆம் தேதிதான் தன் தூதரகப் பணியில் இருந்து ஓய்வு பெற்றார் சிவன்.

தமிழ் நாட்டின் கன்யாகுமரி மாவட்டத்தை பூர்வீகமாகக் கொண்ட சிவன் இந்திய வெளியுறவு அமைச்சில் கடந்த 37 ஆண்டுகளகப் பணியாற்றியிருக்கிறார். புதுடில்லியிலும் கனடா, மெக்சிகோ, நைஜீரியா, சீனா போன்ற நாடுகளில் பணியாற்றி விட்டு அவர் ஆகக் கடைசியாகப் பணியாற்றியது கோலாலம்பூரிலுள்ள மலேசியாவுக்கான இந்தியத் தூதரகத்தில்!

முதலில் சாதாரணமாக ஓட்டப் பயிற்சி மேற்கொள்ளும் நல்ல பழக்கத்தை மட்டுமே சிவன் கொண்டிருந்தார். அண்மையில்தான் நீண்ட தூர ஓட்டப் பந்தயங்களில் சிவன் கலந்து கொள்ளத் தொடங்கினார். இருந்தாலும் குறுகிய காலத்திலேயே மராத்தோன் ஓட்டப் பந்தயங்களில் ஆர்வம் ஏற்பட்டு அதற்கேற்ப தன் ஆற்றலை வளர்த்துக் கொண்டார். இதுவரையில் 1 மணி நேரம் 54 நிமிடங்களுக்குள் மராத்தோன் ஓட்டத்தை நிறைவு செய்ததுதான் தன் உச்சகட்ட அடைவு நிலை என்கிறார் சிவன்.

இத்தகைய ஓட்டப்பந்தயங்களின் மூலம் தனது உடல் நிலையையும், மன உறுதியையும் சிவன், தான் மட்டும் வளர்த்துக் கொள்ளவில்லை. மாறாக, தன்னைச் சுற்றியிருந்த சக ஊழியர்கள், தூதரக அதிகாரிகள் பார்வையில் உடல் நலத்தைப் பேணுவதில் கடுமையான ஓட்டப் பந்தயங்களில் ஈடுபடுவதில் வயது தடையில்லை என்பதற்கு உதாரண மனிதராக மாறினார். அவரைத் தொடர்ந்து பலர் தங்களின் பதவி, வயது பாராமல் ஓட்டப் பயிற்சிகளில் ஆர்வம் காட்டத் தொடங்கினர்.

வயது கூடிக் கொண்டே போனாலும் விடாப்பிடியாக எவ்வாறு தனது ஓட்டப் பயிற்சி பழக்கங்களைத் தொடர முடிந்தது என்பதையும் விளக்குகிறார் சிவன் – “கடந்த 20 ஆண்டுகளாக நான் ஓட்டப் பயிற்சி மேற்கொண்டு வருகிறேன். நாள் ஒன்றுக்கு 5 முதல் 7 கிலோமீட்டர் வரை ஓடுவதன் மூலம் என் உடல் நலத்தைப் பேண வேண்டும், உடலை வலிமையாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதுதான் என் குறிக்கோள். நீண்டதூர ஓட்டங்களைப் பற்றி நான் சிந்தித்ததே இல்லை. எனது சக அதிகாரியான ராஜேஷ் ஓட்டப் பயிற்சிகளில் எனது அர்ப்பண உணர்வைக் கண்காணித்து வந்தார். பாதி மராத்தோன் ஓட்டப் பந்தயங்களுக்கு நீங்கள் தயாராகலாம் – பங்கு பெறலாம் – என ஊக்கமும் உற்சாகமும் கொடுத்தார். அவரின் ஊக்குவிப்பைத் தொடர்ந்து நான் நீண்ட தூர ஓட்டங்களுக்கு என் கால்களைப் பழக்கப்படுத்திக் கொள்ளத் தொடங்கினேன். அப்போது எனக்கு வயது 59” எனக் கூறி, வயதுக்கும் இதுபோன்ற முயற்சிகளுக்கும் தொடர்பில்லை என்பதை சொல்லாமல் சொல்லி நமக்கு உணர்த்துகிறார் சிவன்.

“அடுத்த 3 மாதங்களில் எனது நீண்ட தூர ஓட்டங்களை படிப்படியாக அதிகப்படுத்தி
16 கிலோ மீட்டர்களாக மாற்றினேன். எனது அர்ப்பண உணர்வு பலனைத் தந்தது. கடந்த 2023-ஆம் ஆண்டும் மார்ச் 5-ஆம் தேதி எனது முதல் பாதி மராத்தோன் பந்தயத்தை நிறைவு செய்தேன்” என பெருமிதத்துடன் கூறுகிறார் சிவன்.

“அங்கிருந்து தொடங்கிய ஆர்வமும் உற்சாகமும் காப் போக்கில் சற்றும் குறைவில்லாமல் வளர்ந்தது. 23 ஜூன் 2024 வரை 60-வது வயதில் என் வாழ்க்கையில் நான் பெருமை கொள்ளும் சம்பவமாக – எனது 25-வது மராத்தோன் ஓட்டத்தை நிறைவு செய்தேன். பங்சார் தமிழ்ப் பள்ளி நடத்திய 5 கிலோ மீட்டர் திருவள்ளுவர் ஓட்டத்தையும் நான் நிறைவு செய்தேன். எனது இந்த மராத்தோன் பயணம் பல வாழ்க்கைப் படிப்பினைகளைக் கற்றுக் கொடுத்தது. மன உறுதி, விடாமுயற்சி, ஒரு விஷயத்தைத் தொடர்ச்சியாக செய்வது, மற்ற சக மனிதர்கள், போட்டியாளர்களிடம் இருந்து ஆதரவு  என பல அம்சங்களை நான் கற்றுக் கொண்டேன். நாம் வாழ்க்கையில் ஒரு சாதனையை நிகழ்த்த, விரும்பியதை அடைய, வயது ஒரு பொருட்டல்ல – தடையல்ல – என்பதையும் நான் உணர்ந்து கொண்டதோடு, மற்றவர்களையும் உணர வைத்திருக்கிறேன். இந்தத் துறையில் இதுவரையில் நான் அடைந்துள்ள முன்னேற்றமே என்னை மேலும் தீவிரத்துடன் நீண்ட தூர ஓட்டப் பயணங்களுக்கான உந்துசக்தியாக என்னை முன்னோக்கிச் செலுத்துகிறது. எனது ஓட்டப் பந்தயப் பயணத்தில் மேலும் பல சாதனைகளை நிகழ்த்த, முன்னேற்றங்களை அடைய நான் ஆர்வத்துடன் காத்திருக்கிறேன்” என உற்சாகத்துடன் கூறுகிறார் சிவன்.

இதுபோன்ற நீண்ட தூர ஓட்டங்களில் பங்கு பெறுவதன் மூலம் சிவன் தனியாக அவர் மட்டும் ஓடவில்லை. மற்றவர்களுக்கும் உற்சாகம் தருபவராக, ஊக்கமூட்டுபவராகத் திகழ்கிறார். அதன் மூலம் வாழ்க்கையில் வருடங்களைக் கூட்டிக் கொண்டே செல்வதில் அர்த்தமில்லை. வாழும் வருடங்களில் வாழ்க்கையை செவ்வனவே வாழ்வதுதான் வாழ்க்கை என்பதை நமக்கு உணர்த்துகிறார்.

சிவன் ஓய்வு பெற்று விட்டாலும் அவர் பணியாற்றிய கோலாலம்பூரிலுள்ள இந்தியத் தூதரகத்தினரும் அவரின் நீண்ட தூர ஓட்டங்களுக்காக அவரை நீண்ட காலம் நினைவில் வைத்திருப்பார்கள்.

பொதுவாக ஒருவரின் பிறந்த நாளுக்கு ‘பல்லாண்டு வாழ்க’ என நாம் வாழ்த்துவது வழக்கம். ஆனால், சிவனைப் பார்த்து நாம் கூறவேண்டிய பிறந்த நாள் வாழ்த்து ‘மேலும் பல ஓட்டங்கள் ஓடுக’ என்பதாகத்தான் இருக்க முடியும்.

காரணம், குறுகிய 15 மாத காலத்தில் 59-க்கும் 60-க்கும் இடைப்பட்ட வயதில் அவர் கலந்து கொண்ட பாதி மராத்தோன் ஓட்டங்களைப் பார்த்தால் நாம் பிரமித்துப் போவோம்!

Sl. No Date Name of Half Marathon
1 05-03-2023 KL City Marathon
2 07-05-2023 Cyber City Half Marathon
3 25-06-2023 Ipoh Half Marathon
4 20-08-2023 Melaka International Marathon
5 16-09-2023 Penang 2nd Bridge Cultural Night Run – Half Marathon
6 24-09-2023 PJ Half Marathon
7 01-10-2023 Napa Half Marathon – California, USA
8 15-10-2023 MPKJ Half Marathon
9 26-10-2023 Putrajaya Night Marathon
10 04-11-2023 Kedah International Half Marathon
11 03-12-2023 Putrajaya Half Marathon
12 10-12-2023 Putrajaya Popcorn Half Marathon
13 17-12-2023 Bukit Jalil City Half Marathon
14 01-01-2024 KL New Year Run
15 07-01-2024 Malacca Heritage City Half Marathon
16 28-01-2024 Cybercity Half Marathon
17 03-02-2024 AS International Half Marathon
18 25-02-2024 Aston Martin Half Marathon
19 03-03-2024 Miri Marathon
20 10-03-2024 KL City Day Half Marathon
21 28-04-2024 Twincity Marathon
22 05-05-2024 Borneo Marathon
23 19-05-2024 Generali Malaysia – Half Marathon
24 09-06-2024 Kota Kinabalu City Half Marathon
25 23-06-2024 2xu Compression Run – Half Marathon