கோலாலம்பூர்: ஆஸ்ட்ரோ வானவில் எச்டி (அலைவரிசை 201) மற்றும் ஆன் டிமாண்டில் இடம் பெற்றுள்ளது ‘நலம் அறிய ஆவல்’ எனும் சுகாதார ஆவணப்படத் தொடர்.
இத்தொடர் ஆபத்தான நோய்கள் குறித்த விழிப்புணர்வை சமூகத்தினரிடையே அதிகரிக்கிறது. 24 வயதான வளர்ந்து வரும் உள்ளூர் திறமைசாலியான பாலச்சந்திரன் தனபாலன் இயக்கியுள்ள 10 அத்தியாயங்களைக் கொண்ட இத்தொடர் பொதுமக்கள் மத்தியில் சுகாதாரக் கல்வியை ஊக்குவிக்கிறது.
இந்தத் தொடர் மாரடைப்பு, பக்கவாதம், உடல் பருமன், அபாயகரமான சிறுநீரக நோய் (chronic kidney disease, CKD) உள்ளிட்ட பத்து ஆபத்தான நோய்களைப் பற்றிய தகவல்களைச் சித்தரிக்கின்றது என பாலச்சந்திரன் தனபாலன் (படம்) பகிர்ந்துக் கொண்டார்.
வெவ்வேறு வல்லுநர்கள், தடுப்பு மற்றும் அதன் பின் விளைவுகளைப் பற்றி இத்தொடரில் விவாதிப்பர். அவர் கூறுகையில், “உடல்நலம் தொடர்பான விஷயங்களில் சமூகத்தின் பொதுவான அலட்சியப் போக்கு மற்றும் அறியாமையே இத்தொடர் பிறப்பதற்கு ஒரு முக்கிய காரணம். இச்சுகாதார ஆவணப்படம் மக்களிடையே ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தைத் தூண்டும் என்று நாங்கள் நம்புகிறோம்” எனத் தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கூறுகையில், எங்கள் திறமையை வெளிப்படுத்தவும், மேலும் உயர் தரமான உள்ளடக்கத்தை மலேசியர்களுக்கு கொண்டு வரவும் இந்த வாய்ப்பை வழங்கிய ஆஸ்ட்ரோவிற்கு இவ்வேளையில் நன்றி கூற நான் கடமைப்பட்டுள்ளேன் என்றார்.

“முன்னணி உள்ளூர் உள்ளடக்க வழங்குநராக, மலேசிய இந்திய திரைப்படத் துறையின் தரத்தை உயர்த்த, உள்ளூர் திறமைசாலிகளிடையே ஆக்கப்பூர்வமான கருத்துகளையும் படைப்பாற்றலையும் ஆஸ்ட்ரோ தொடர்ந்து ஊக்குவிக்கிறது. ‘நலம் அறிய ஆவல்’ ரசிகர்களிடையே அபிமானத்தை பெற்று வருவதோடு ஆதரவையும் பெறும் என்று பெரிதும் நம்புகிறோம். இஃது உயர்தர உள்ளடக்கத்தைத் தொடர்ந்து உருவாக்க எங்களை மென்மேலும் ஊக்குவிக்கும்” என்றும் பாலச்சந்திரன் தெரிவித்தார்.
தயாரிப்பு அனுபவம் விலைமதிப்பற்றதாக இருந்தாலும் அமைப்பு, செயல்முறை, முன் மற்றும் பிந்தைய தயாரிப்புகள் பல சவால்களை உள்ளடக்கியது. பாலச்சந்திரன் கூறுகையில், “இரசிகர்களுக்கு ஒரு பரந்த மற்றும் சிறந்த புரிதலை வழங்கும் நோக்கில், மருத்துவர்கள், உணவியல் நிபுணர்கள், யோகா பயிற்சியாளர்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட நம்பகமான விருந்தினர்களுடன் பல நேர்காணல்களை ஒருங்கிணைக்க வேண்டியிருந்தது. தயாரிப்பின் போது நேர நிர்வாகமும் ஒரு சவாலாக இருந்தது. கூடுதலாக, நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை செயல்படுத்தப்பட்டபோது நிகழ்ச்சியில் பொது மக்களிடையே நேர்காணல்களை வீட்டுப் பதிவுச் செய்யப்பட்ட நேர்காணல்களாக மாற்றியமைத்தது சவால்களில் ஒன்றாகும்.” என்றார்.

தனது திரைப்படத் தொழில் ஆர்வம் குறித்துக் கருத்துரைத்த பாலச்சந்திரன்
30 ஆண்டுகளுக்கும் மேலாக இயக்குநராக இருந்த தனது தந்தையே தனது உத்வேகத்துக்கு முக்கிய காரணம் என்று கூறினார்.
சிறு வயதிலிருந்தே திரைப்படங்கள் மற்றும் மேடை நாடகங்களைப் பற்றி அறியவே பாலச்சந்திரனுக்கு திரைப்படத்தின் மீது நாட்டம் ஏற்பட்டு மிகுந்த ஆர்வமும் பிறந்தது. இந்தத் தொடரை இயக்குவதற்கு முன்பு, தொலைக்காட்சி அலைவரிசைக்கான 13-அத்தியாயங்கள் திட்டம், குறும்படம், இசைக் காணொளிகள் என பல நிகழ்ச்சிகளுக்கு இணை இயக்குநராக பணியாற்றியுள்ளார்.
அனைத்து ஆஸ்ட்ரோ வாடிக்கையாளர்களும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் காலை 11 மணிக்கு ஆஸ்ட்ரோ வானவில் எச்டியில் (அலைவரிசை 201) ‘நலம் அறிய ஆவல்’ நிகழ்ச்சியை கண்டு களிப்பதோடு அனைத்து அத்தியாயங்களையும் எப்போதும் ஆன் டிமான்டில் பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழலாம்.