மதுரை, செப்.23- தே.மு.தி.க. தொழிற்சங்க பேரவை மாநில பொருளாளர் முஜிபுர்ரகுமான் இல்ல திருமணம் மதுரையில் நடந்தது.
விழாவில் கலந்து கொண்டு தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் திருமணத்தை நடத்தி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
மணமக்களிடையே விட்டு கொடுக்கும் மனப்பான்மை இருக்க வேண்டும். காசு பணம் முக்கியமல்ல. காசு நிறைய சேர்த்தால் தூக்கம் வராது. நாட்டில் லஞ்சம் பெருகி விட்டது. தெய்வ சக்தி இன்னமும் இருக்கிறது. அதை நம்ப வேண்டும். அதற்காக கண்மூடித்தனமாக இருக்க கூடாது. அதேபோல் அடாவடியும், பேராசையும் இருக்கக்கூடாது.
என் மீது 34 வழக்குகள் போடப்பட்டுள்ளன. இதனை கண்டு எல்லாம் நான் பயப்பட மாட்டேன். எனது மனச்சாட்சிக்கு மட்டும் தான் நான் பயப்படுவேன். மக்கள் பிரச்சினைகள் பற்றி நான் பேசுவதை யாராலும் தடுக்க முடியாது. தேர்தல் இன்னும் வரவில்லை.
ஆனால் அதற்குள் யாருடன் கூட்டணி என்று நம்மிடம் கேள்வி கேட்கிறார்கள். தேர்தல் நேரத்தில் கூட்டணி பற்றி பார்க்கலாம். காலம் முன்னேறியது போல், லஞ்சமும் அதிகரித்து விட்டது. உழைத்து சம்பாதித்தால் தான் அந்த காசு நிற்கும்.
அதை தான் நானும் நம்புகிறேன். நேரம் நன்றாக இருக்கும் வரை எல்லாம் நன்றாக தான் இருக்கும். நான் கடவுளையும், மக்களையும் தான் நம்புகிறேன். என் தொண்டர்களையும், கட்சியையும் அழிக்க நினைக்கிறார்கள். ஆனால் எங்களை அழிக்க முடியாது. இவ்வாறு அவர் பேசினார்.