புதுடெல்லி, அக் 17- இலங்கையில் நடைபெற உள்ள காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது என்று வலியுறுத்தி தமிழகத்தில் போராட்டங்கள் வலுத்து வரும் நிலையில், அந்த மாநாட்டை பிரதமர் மன்மோகன் சிங் புறக்கணிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. காமன்வெல்த் நாடுகளின் தலைவர்கள் உச்சி மாநாடு இலங்கை தலைநகர் கொழும்புவில் அடுத்த மாதம் 10ந் தேதி நடைபெற உள்ளது. உள்நாட்டு போரில் அப்பாவி தமிழர்களை கொன்று குவித்து மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வேண்டும் என்று தமிழக அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம் என பல்வேறு போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன. காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் கலந்து கொள்ள கூடாது என்று திமுக தலைவர் மு.கருணாநிதி வலியுறுத்தியுள்ளார். தமிழக மக்களின் உணர்வுகளை மதித்து முடிவு எடுக்கப்படும் என்று கருணாநிதிக்கு பிரதமர் மன்மோகன் சிங் பதில் கடிதம் அனுப்பினார்.
இந்நிலையில் காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் கலந்து கொள்ள மாட்டார் என்று தமிழகத்தை சேர்ந்த மத்திய இணை அமைச்சர் ஒருவர் கூறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குடியரசு துணை தலைவர் ஹமீத் அன்சாரி மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் ஆகியோர் இந்தியா சார்பில் மாநாட்டில் பங்கேற்க உள்ளதாகவும் டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.
2011ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா சார்பில் ஹமீத் அன்சாரி கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.