லக்னோ, அக் 30- உத்தர பிரதேசத்தின் பழங்கால மன்னர் கோட்டையில் தங்கம் இருக்கலாம் என்ற நம்பிக்கையில், கடந்த பத்து நாட்களாக நடைபெற்ற தோண்டுதல் பணி நேற்று முதல் நிறுத்தப்பட்டுள்ளது. ‘அங்கு தங்கம் இருப்பதற்கான வாய்ப்பு இல்லை’ என தொல்பொருள் ஆய்வுத்துறை தெரிவித்துள்ளது.
உன்னாவ் என்ற பகுதியில் சோபன் சர்க்கார் என்ற சாமியார், ‘என் கனவில் தோன்றிய, மறைந்த மன்னர் ராம்பக்ஸ் சிங் தன் கோட்டையின் அடியில் 1,000 கிலோ தங்கத்தை புதைத்து வைத்துள்ளதாக கூறினார்’ என தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
அப்பகுதியை சேர்ந்த மத்திய அமைச்சர் சரண்தாஸ் மகந்த், இந்த தகவலை பிரதமர் அலுவலகத்திற்கு தெரிவித்தார். பிரதமர் அலுவலகம் கேட்டுக் கொண்டதன் படி, தொல்பொருள் ஆய்வுத்துறை தங்கத்தை தேடி கோட்டையை தோண்டத் துவங்கியது.
கடந்த 18ம் தேதி, கோட்டையை தோண்டும் பணியை துவங்கியது. பத்து நாட்கள் தொடர்ந்து தோண்டியும் தங்கப் புதையல் இருப்பதற்கான எவ்வித தடயங்களும் கிடைக்கவில்லை. மாறாக, உடைந்த வளையல் துண்டுகள், உடைந்த பானை போன்றவற்றின் உடைந்த பாகங்கள் மட்டுமே கிடைத்தன.
இந்நிலையில் தொல்பொருள் ஆய்வுத் துறை நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘உன்னாவ் கோட்டையில், தங்கம் இருப்பதற்கான தடயங்கள் எதுவும் தெரியாததால், தோண்டும் பணி நிறுத்தப்பட்டுள்ளது’ என தெரிவித்துள்ளது.