லக்னோ-திருமண விழா கொண்டாட்டத்தின்போது உற்சாக மிகுதியில், வாழ்த்து தெரிவிக்கும் வகையில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் மணமகனே குண்டு பாய்ந்து உயிரிந்த சோகச் சம்பவம் இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது.
அங்குள்ள சிதாபூர் என்ற ஊரைச் சேர்ந்த ரஸ்தோகி என்ற 28 வயது ஆடவருக்கு நேற்று முன்தினம் திருமணம் நடந்தது. அச்சமயம் அவரை குதிரையில் ஊர்வலமாக அழைத்து வந்தனர்.
அப்போது மணமக்கள் குடும்பத்தார் உற்சாக மிகுதியில் ஆட்டம் பாட்டத்தில் ஈடுபட்டனர். வாண வேடிக்கைகளும் நடத்தப்பட்டன. மேலும் ஒருசிலர் தங்களிடம் இருந்த நாட்டுத் துப்பாக்கிகளைக் கொண்டு வானத்தை நோக்கிச் சுட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
அப்போது எதிர்பாராத விதமாக ஒரு தோட்டா குதிரை மீது அமர்ந்திருந்த மாப்பிள்ளையின் தலையில் பாய்ந்ததில், அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
இதனால் திருமண விழா சோகத்தில் முடிவடைந்தது.
மணமகன் மீது எதிர்பாராத விதமாக துப்பாக்கித் தோட்டா பாய்ந்ததா, அல்லது அவர் கொலை செய்யப்பட்டாரா என்று கால்துறை விசாரணை நடத்தி வருகிறது.
அண்மையில் உத்தரபிரதேச மாநிலத்தில் பஞ்சாயத்து தேர்தல் வெற்றிக் கொண்டாட்டத்தின்போது சிலர் துப்பாக்கியால் சுட்டதில் சிறுவன் ஒருவர் பலியாகி இருந்தான்.