Home Featured வணிகம் 251 ரூபாய் திறன்பேசிகள்! – இன்று மீண்டும் இணைய வழி விற்பனை தொடங்குகின்றது!

251 ரூபாய் திறன்பேசிகள்! – இன்று மீண்டும் இணைய வழி விற்பனை தொடங்குகின்றது!

726
0
SHARE
Ad

Freedom-Rs-251-Smartphoneபுதுடில்லி – 251 ரூபாய் விலையில், உலகின் மிகக் குறைந்த விலையிலான திறன்பேசி (ஸ்மார்ட்போன்) என விளம்பரப்படுத்தப்பட்ட ‘பிரீடம் 251’ என்ற பெயர் கொண்ட திறன்பேசிகள், நேற்று பெரும் எதிர்பார்ப்புடன் இந்தியாவில் இணையம் வழி விற்பனைக்கு வந்தன.

ஆனால், விற்பனை தொடங்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே அளவுக்கதிகமான பேர் அந்தக் கைத்தொலைபேசியை வாங்க முற்பட்டதால், அந்த விற்பனைக்கான இணையத் தளம் செயலிழந்தது. இதுவரை சுமார் 30,000 திறன்பேசிகள் மட்டுமே விற்பனையாகியுள்ளன.

இதற்கிடையில், இன்று முதல் மீண்டும் அந்த திறன்பேசிகளின் விற்பனை இணையம் வழி மீண்டும் தொடங்குகின்றது.

#TamilSchoolmychoice

Freedom 251-smartphone launch-பிரீடம் 251- பாஜக பிரமுகம் முரளி மனோகர் ஜோஷியால் அறிமுகப்படுத்தப்பட்டபோது….

வாடிக்கையாளர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்ட பிரீடம் 251-இன் தயாரிப்பாளர்களான ரிங்கிங் பெல்ஸ் நிறுவனம், ஒரு வினாடிக்கு சுமார் 6 இலட்சம் பயனீட்டாளர்கள் விற்பனைக்கான இணையத் தளத்தை முற்றுகையிட்ட காரணத்தால்தான் இணையத் தளம் செயலிழந்தது என்றும் வாடிக்கையாளர்களின் அபரிதமான ஆதரவுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

புதுடில்லி நொய்டாவில் இயங்கும் ரிங்கிங் பெல்ஸ் நிறுவனம், அமிட்டி பல்கலைக் கழகப் பட்டதாரியான மோஹிட் குமார் கோயல் என்பவரால் 5 மாதங்களுக்கு முன்னர் தொடங்கப்பட்டது.

அந்த திறன்பேசிகளை உற்பத்தி செய்வதற்கு தலா 2,500 ரூபாய் செலவு பிடிக்கும் என்றாலும், அதிக அளவிலான உற்பத்தி, புதுமையான, புதிய கோணத்திலான விற்பனை வியூங்கள், வரிகள் குறைப்பு, இணையம் மூலம் மட்டுமே விற்பனை போன்ற அம்சங்களைப் பின்பற்றுவதன் மூலம் அந்த நஷ்டத்தை ஈடுகட்ட முடியும் என அந்த நிறுவனம் நம்பிக்கை கொண்டுள்ளது.

இந்தியாவிலேயே உற்பத்தி செய்யப்படும் உட்பாகங்கள் மூலம் வரிவிதிப்பில் 13.8 சதவீத வரிகளைக் குறைக்க அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இணையம் மூலமே விற்பனைகள் மேற்கொள்ளப்படுவதால், இந்தியா முழுக்க விநியோகம் செய்யும் செலவினங்களையும் அந்நிறுவனம் தவிர்க்கின்றது.