கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு மலேசியாவில் டெங்கி காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10,000 உயர்ந்துள்ளதாகவும், அதாவது கடந்த ஆண்டை விட 50 சதவிகித நோயாளிகள் அதிகரித்துள்ளனர் என்றும் சுகாதாரத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்ரமணியம் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
“சிலாங்கூரில் தான் அதிக அளவில் (15,000 பேர்) டெங்கி காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்கு நாட்டின் தட்பவெட்பத்தில் ஏற்படும் மாற்றங்களும் ஒரு காரணம்” என்று சுப்ரமணியம் குறிப்பிட்டார்.
“டெங்கி காய்ச்சலுக்குக் காரணமான ஏடிஎஸ் கொசுக்கள் மழைக் காலங்களில் தேங்கிக் கிடக்கும் நீரில் இனப்பெருக்கம் செய்கின்றன. எனவே நாட்டிலுள்ள அனைத்து அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் சுகாதாரத் துறையில் இருப்பவர்கள் என அனைவரின் ஒத்துழைப்போடு, டெங்கிக் காய்ச்சல் குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்த வேண்டும்” என்று சுப்ரமணியம் தெரிவித்தார்.
சுகாதாரத்துறையால் தற்போது வழி நடத்திச் செல்லப்படும் ஜிஏஎம் (Genetic Aedes Mosquito) திட்டத்தின் தற்போதைய நிலை குறித்துக் கருத்துரைத்த சுப்ரா, டெங்கியைத் ஒழிக்கும் ஜிஏஎம் திட்டத்தை தற்போதைக்கு அமலாக்கம் செய்யப்போவதில்லை என்றும், அரசாங்கத்தின் பரிசீலனையில் அத்திட்டம் உள்ளது என்றும் சுப்ரா தெரிவித்தார்.