இஸ்லாமாபாத், நவம்பர் 12- தலிபான்களால் சுடப்பட்டு படுகாயமடைந்த பாகிஸ்தானிய சிறுமி மலாலா யூசூப் எழுதிய புத்தகத்துக்கு, பாகிஸ்தான் பள்ளிகளில் தடை விதிக்கப்பட்டு உள்ளது. ஆப்கானிஸ்தானை ஆட்சி செய்த தலிபான்கள் பெண்கள் பள்ளிக்கு செல்வதை எதிர்த்தனர். பாகிஸ்தானில் பெண் கல்விக்காக பிரசாரம் செய்த மலாலா யூசுப்சாய், 16 என்ற மாணவியை கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தலிபான் பயங்கரவாதிகள் சுட்டனர்.
இதில், மலாலாவுக்கு தலை மற்றும் கழுத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. உயிருக்கு ஆபத்தான நிலையில் மலாலா லண்டனில் உயர் சிகிச்சை பெற்றார். தற்போது, உடல் நலம் தேறியுள்ள மலாலா, பிரிட்டனில் உள்ள பர்மிங்காம் நகரில் படிக்கிறார். கடந்த ஜூலை மாதம் தன் பிறந்த நாளையொட்டி மலாலா ஐ.நா., சபையில் உரையாற்றினார். தலிபான்களால் தான் துன்புறுத்தப்பட்ட விஷயம் உள்ளிட்டவற்றை, ” ஐ ஆம் மலாலா’ என்ற தலைப்பில் புத்தகமாக வெளியிட்டு உள்ளார்.
உலகம் முழுவதும், இந்த புத்தகம் நல்ல விற்பனையாகி வருகிறது. ஆனால், பாகிஸ்தானில் உள்ள தனியார் பள்ளிகளின் கூட்டமைப்பு இந்த புத்தகத்துக்கு தடை விதித்து உள்ளது. பாகிஸ்தானில் 40 ஆயிரம் தனியார் பள்ளிகள் உள்ளன.
இந்த பள்ளிகளின் கூட்டமைப்பின் தலைவர் காசிப் மிர்சா இதுகுறித்து , “மலாலா சிறுவர்களுக்கு முன் உதாரணமாக திகழ்கிறாள். ஆனால், அவள் எழுதிய புத்தகம் முரண்பாடுகள் நிறைந்ததாக உள்ளது. குறிப்பாக, இஸ்லாமுக்கு எதிரான கருத்துக்கள் அதில் இடம் பெற்றுள்ளன. மலாலா மேற்கத்திய நாடுகளின் பிரதிநிதியாக இருக்கிறாள். எங்களுக்கு ஆதரவாக இல்லை. “சாத்தானின் வேதங்கள்’ என்ற புத்தகத்தை எழுதிய சல்மான் ருஷ்டியை இந்த புத்தகத்தில் மலாலா ஆதரித்து எழுதியிருக்கிறாள். சாததானின் வேதங்கள் புத்தகத்தை எழுதியதற்காக, ஈரான் நாடு சல்மான் ருஷ்டிக்கு மரண தண்டனை அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. மலாலா எழுதிய புத்தகம், மாணவர்களை குழப்பத்தில் ஆழ்த்துவதாக உள்ளது” என காசிப் மிர்சா கூறியுள்ளார்.