இஸ்லாமாபாத், டிசம்பர் 13 – பாகிஸ்தானில் தலீபான் தீவிரவாதிகளின் மிரட்டலுக்கு மத்தியிலும், பெண் கல்விக்காக குரல் கொடுத்து வரும் மலாலா யூசுப்சாய்க்கு அமைதிக்கான நோபல் பரிசு சமீபத்தில் நார்வே தலைநகர் ஆஸ்லோவில் வழங்கப்பட்டது.
இந்நிலையில், மேற்கத்திய கலாச்சாரத்தினை பாகிஸ்தானில் பரப்புவதற்காகவே மலாலாவிற்கு நோபல் பரிசு வழங்கப்பட்டதாக தலீபான்கள் தெரிவித்துள்ளனர்.
பாகிஸ்தானின் ஸ்வாட் பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள பள்ளியில் கடந்த 2012-ம் ஆண்டு மலாலா படித்து கொண்டிருந்தார். அப்பகுதியில் உள்ள பெண் குழந்தைகள் பள்ளிக்குச் செல்லக் கூடாது என்று தலிபான்கள் கட்டுப்பாடு விதித்திருந்தனர்.
அவர்களுக்கு எதிராக மலாலா குரல் கொடுத்ததால், அவரை தலிபான்கள் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். அதில் ஒரு குண்டு மலாலாவின் தலையில் பாய்ந்தது.
இதைத் தொடர்ந்து, அவர் லண்டன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, அங்கிருந்தபடி பெண் கல்விக்கான விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். மலாலாவின் சமூகப் போராட்டத்திற்காகவே நார்வே அரசு அவருக்கு நோபல் பரிசு வழங்கியது.
இந்நிலையில், மலாலாவிற்கு வழங்கப்பட்ட நோபல் பரிசு குறித்து, அவரை கொலை செய்ய முயன்ற தெஹ்ரீக்-இ-தலிபான் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில்,
“மலாலாவிற்கு, பாகிஸ்தானில் மேற்கத்திய கலாச்சாரத்தை பரப்புவதற்காகவே நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது” என்று அவர் கூறியுள்ளார்.
இதற்கிடையே ஆஸ்லோ நகரில் நடந்த கண்காட்சியில், பாகிஸ்தானில் மலாலா சுடப்பட்ட போது அணிந்திருந்த பள்ளி சீருடை பார்வைக்கு வைக்கப்பட்டது.
அதைக் கண்டதும் அவர் கண்கலங்கினார். அவருடன் நோபல் பரிசை பகிர்ந்து கொண்ட இந்தியாவின் கைலாஷ் சத்யார்த்தி அவருக்கு ஆறுதல் கூறினார்.