கடந்த 2012-ஆம் ஆண்டு பள்ளியிலிருந்து பேருந்தில் திரும்பிக் கொண்டிருந்த மலாலாவை தலிபான் பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர். இதுதொடர்பாக, 10 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டு அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கு தொடர்பான விசாரணையானது, அந்நாட்டில் உள்ள பயங்கரவாத ஒழிப்பு நீதிமன்றத்தில் ரகசிய முறையில் விசாரிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 10 பேரில் 8 பேரை நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளதாக பிரிட்டனில் உள்ள ஒரு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த வழக்கில் 2 பேருக்கு எதிராக மட்டுமே போதுமான சாட்சியங்கள் இருப்பதாகக் கூறி, மற்ற 8 பேரையும் நீதிபதி விடுதலை செய்து உத்தரவிட்டதாக அந்தச் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
பயங்கரவாதிகளுக்கு அஞ்சாமல் பெண் கல்வியை வலியுறுத்தி வரும் குழந்தைகளின் உரிமைகள் நல ஆர்வலர் மலாலாவுக்கு கடந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.