கோலாலம்பூர், நவ 22 – பிரதமரின் துணைவியார் டத்தின்ஸ்ரீ ரோஸ்மா மன்சோர் அரசாங்கத்திற்குச் சொந்தமான ஜெட் விமானத்தில் கட்டார் பயணம் மேற்கொண்டதைப் பலர் ஆட்சேபித்தைக் குறித்து தாம் வேதனையும் வருத்தமும் அடைவதாக கீதாஞ்சலி ஜி.வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளார்.
மை-ஊமென் தலைவர் என்ற முறையில், கட்டாரின் தலைநகரான டேஹாவில் நடைபெறும் நான்காவது சர்வதேச மகளிர் வர்த்தக மாநாட்டில் மலேசியாவைப் பிரதிநிதித்துக் கலந்து கொள்ள பிரதமரின் துணைவியாருக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது என்பதை நான் அறிந்துள்ளேன்.
அவருடைய பயணத்திற்கு அனுமதி வழங்குவதில் அமைச்சரவை முழு பொறுப்புடன் வெளிப்படையான போக்கைக் கையாண்டுள்ளது. கட்டார் அரசாங்கம் பிரதமரின் துணைவியாருக்கு நேரடி அதிகாரப்பூர்வ அழைப்பை விடுத்துள்ளது. மலேசியர்களாகிய நாம் இதற்கு பெருமை கொள்வதோடு, பிரதமரின் துணைவியாரின் இந்த முயற்சிக்கும் உழைப்புக்கும் நன்றிக் கடன் பட்டிருக்க வேண்டும்.
அவரின் அயல் நாட்டுப் பயணங்கள் வெறும் உல்லாசத்திற்காக அல்ல; மாறாக வெளிப்படையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இம்மாநாட்டுக்கு கலந்து கொள்ள கடமையுணர்வோடு சென்றுள்ளார். உண்மையில், மை-ஊமன் சார்பாகவும் மலேசியர்கள் சார்பாகவும் பிரதமரின் துணைவியார் இம்மாநாட்டில் கலந்து கொண்டதன் மூலம் நாம் அனைவருக்கும் பல நன்மைகள் ஏற்பட்டுள்ளதால் நாம் அவருக்கு நன்றிக் கடன் பட்டுள்ளோம்.
‘பிரதமரின் துணைவியாருக்கு எதிரான குறை கூறல் நியாயமற்றது. அதோடு, அயல்நாட்டு முதலீட்டாளர்கள் நம் நாட்டுக்கு வருவதற்கு தயக்கத்தை ஏற்படுத்தும் என்றும் கீதாஞ்சலி ஜி கூறினார்.