Home இந்தியா இந்திய தேர்தல் வரலாற்றில் முதன்முறையாக “நோட்டா” பொத்தான் அறிமுகம்

இந்திய தேர்தல் வரலாற்றில் முதன்முறையாக “நோட்டா” பொத்தான் அறிமுகம்

723
0
SHARE
Ad

1fc05534-031f-4ba0-ba0b-91661eea0643_S_secvpf

புதுடெல்லி, டிசம்பர் 4- 70 தொகுதிகளை கொண்ட டெல்லி சட்டசபைக்கு இன்று தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் 810 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர்.

70 தொகுதிகளிலும் போட்டியிடும் ஆளும் காங்கிரஸ் கட்சியை எதிர்த்து பா.ஜ.க. 66 தொகுதிகளிலும், ஆம் ஆத்மி கட்சி 70 தொகுதிகளிலும் நேருக்கு நேர் மோதுகின்றன.

#TamilSchoolmychoice

மாயாவதியின் பகுஜன் சமாஜ் வேட்பாளர்கள் 69 இடங்களிலும், முலாயம் சிங்கின் சமாஜ்வாதி கட்சி வேட்பாளர்கள் 27 இடங்களிலும் போட்டியிடுகின்றனர்.

மத்திய வேளாண்மை துறை மந்திரி சரத்பவாரின் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் 9 தொகுதிகளில் வேட்பாளர்களை இறக்கியுள்ளது. சுயேட்சை வேட்பாளர்களாக 224 பேர் போட்டியிடுகின்றனர்.

புதுடெல்லி தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடும் டெல்லி முதல் மந்திரி ஷீலா தீட்சித்தை எதிர்த்து பா.ஜ.க. சார்பில் ஹர்ஷவர்தன், ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் சில சுயேட்சை வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

இன்றைய தேர்தலில் 66.1 லட்சம் ஆண் வாக்காளர்கள், 53.2 லட்சம் பெண் வாக்காளர்கள், 4.05 லட்சம் முதன்முறை வாக்காளர்கள் என சுமார் 1 கோடியே 90 லட்சம் பேர் தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்ற உள்ளனர்.

தேர்தல் பணிகளில் 41 ஆயிரத்து 95 அரசு ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 21 நாடுகளை சேர்ந்த தேர்தல் பார்வையாளர்கள் இன்றைய வாக்குப்பதிவை கண்காணிக்கின்றனர்.

2014-ம் ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலுக்கான முன்னோட்டம் என கருதப்படும் இந்த தேர்தலில் வென்றாக வேண்டும் என்பதில் அனைத்து கட்சிகளுமே கவனமாக செயலாற்றி வருகின்றன.

4வது முறையாக காங்கிரஸ் கட்சி தான் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என ஷீலா தீட்சித் நம்பிக்கை தெரிவித்துள்ளார். அதற்கு சற்றும் இடமளித்து விடக்கூடாது என்ற முனைப்பில் பா.ஜ.க.வும், ஆம் ஆத்மி கட்சியும் டெல்லி ஆட்சியை பிடிப்பதில் தனித்தனியே தீவிரமாக பாடுபட்டு வருகின்றன.

இன்று காலை 8 மணிக்கு தொடங்கும் வாக்குப்பதிவு மாலை 5 மணியுடன் நிறைவடைகிறது. 5 மணிக்கு முன்னதாக வந்து வரிசையில் நிற்கும் வக்காளர்களுக்கு டோக்கன் வழங்கப்படும். அவர்கள் மட்டும் 5 மணிக்கு பின்னரும் வாக்களிக்கலாம்.

தேர்தல் பணிகளை 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் கவனிப்பார்கள்.

இந்திய தேர்தல் வரலாற்றிலேயே முதன்முறையாக இந்த தேர்தலில் தான் “யாருக்கும் வாக்களிக்க விருப்பம் இல்லை” (நோட்டா)என்று தேர்வு செய்யும் பொத்தான்கள் பொருத்தப்பட்ட வாக்கு இயந்திரங்களில் பயன்படுத்தப்படுகின்றது.

இந்நிலையில், புதுடெல்லியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மொத்தம் உள்ள 11 ஆயிரத்து 763 வாக்குச்சாவடிகளில் 630 பதற்றம் நிறைந்ததாக கண்டறியப்பட்டுள்ளது. இன்றைய தேர்தல் சுதந்திரமாகவும், நியாயமாகவும், பயமின்றியும் நடைபெற 64 ஆயிரம் டெல்லி  காவல் அதிகாரிகளுடன் 10 ஆயிரத்து 700 மத்திய ரிசர்வ் படை காவல்துறையினரும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

45 இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு வாகன தணிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வாக்குப்பதிவு நிறைவடைந்ததும் வாக்கு இயந்திரங்கள் வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு பாதுகாக்கப்படும்.

வரும் 8-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு, பிற்பகலில் முடிவுகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 2008 தேர்தலில் 57.58 சதவீதம் வாக்குகள் பதிவானது நினைவிருக்கலாம்.