ஷா ஆலம், டிச 16 – சிலாங்கூர் மாநில ஜசெக தலைவராக பெட்டாலிங் ஜெயா நாடாளுமன்ற உறுப்பினர் டோனி புவா நேற்று தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் தெரசா கோவிற்குப் பதிலாக அப்பதவிக்கு பொறுப்பேற்றார்.
நேற்று நடைபெற்ற சிலாங்கூர் மாநில ஜசெக தேர்தலில், 15 தலைமைத்துவ பதவிகளுக்கு 36 பேர் போட்டியிட்டனர்.
அதன்படி, வெற்ற பெற்றவர்களில் டோனி புவா தலைவராகவும், பூச்சோங் நாடாளுமன்ற உறுப்பினர் கோபிந் சிங் டியோ துணைத் தலைவராகவும், சுங்கை பினாங்கு சட்டமன்ற உறுப்பினர் தெங் சாங் கிம் மற்றும் சிலாங்கூர் சட்டமன்ற சபாநாயகர் ஹன்னா இயோ ஆகியோர் உதவித்தலைவர்களாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இது குறித்து டோனி புவா கூறுகையில், “ எனக்கு வழங்கப்பட்டுள்ள மிகவும் பொறுப்புள்ள மற்றும் சவால்கள் நிறைந்த பதவியை பணிவுடன் ஏற்றுக்கொள்கிறேன். சிலாங்கூரில் போட்டியிட்ட அனைத்துத் தொகுதிகளிலும் ஜசெக வெற்றி பெற்றது. இப்படிப்பட்ட காலகட்டத்தில் நான் இப்பதவியை ஏற்கிறேன். அந்த சாதனையை மிஞ்சுவது கடினம் தான்” என்று புவா கூறினார்.
மேலும், தனது முன்னோடிகள் ஏற்படுத்திக் கொடுத்திருக்கும் அத்தகைய சாதனைக்கு இழுக்கு வந்துவிடாமல், தொடர்ந்து அதை நிலைநிறுத்துவது தான் தனக்கு இருக்கும் மிகப் பெரிய சவால் என்றும் புவா குறிப்பிட்டார்.